Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Sunday, April 20, 2025

April 21st : First reading God raised this man Jesus to life, and all of us are witnesses to thisA Reading from the Acts of Apostles 2:14, 22-33

April 21st :  First reading 

God raised this man Jesus to life, and all of us are witnesses to this

A Reading from the Acts of Apostles  2:14, 22-33 

On the day of Pentecost Peter stood up with the Eleven and addressed the crowd in a loud voice: ‘Men of Israel, listen to what I am going to say: Jesus the Nazarene was a man commended to you by God by the miracles and portents and signs that God worked through him when he was among you, as you all know. This man, who was put into your power by the deliberate intention and foreknowledge of God, you took and had crucified by men outside the Law. You killed him, but God raised him to life, freeing him from the pangs of Hades; for it was impossible for him to be held in its power since, as David says of him:
I saw the Lord before me always,
for with him at my right hand nothing can shake me.
So my heart was glad
and my tongue cried out with joy;
my body, too, will rest in the hope
that you will not abandon my soul to Hades
nor allow your holy one to experience corruption.
You have made known the way of life to me,
you will fill me with gladness through your presence.
‘Brothers, no one can deny that the patriarch David himself is dead and buried: his tomb is still with us. But since he was a prophet, and knew that God had sworn him an oath to make one of his descendants succeed him on the throne, what he foresaw and spoke about was the resurrection of the Christ: he is the one who was not abandoned to Hades, and whose body did not experience corruption. God raised this man Jesus to life, and all of us are witnesses to that. Now raised to the heights by God’s right hand, he has received from the Father the Holy Spirit, who was promised, and what you see and hear is the outpouring of that Spirit.’

The Word of the Lord.

Saturday, April 19, 2025

பாஸ்கா திருவிழிப்பு ஏப்ரல் 19 : நற்செய்தி வாசகம்உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்?✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 1-12

பாஸ்கா திருவிழிப்பு  

ஏப்ரல்  19 :  நற்செய்தி வாசகம்

உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்?

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 1-12
வாரத்தின் முதல் நாள் விடியற்காலையிலேயே தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருள்களை எடுத்துக்கொண்டு அப்பெண்கள் கல்லறைக்குச் சென்றார்கள்; கல்லறை வாயிலிலிருந்து கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் உள்ளே நுழைந்தபோது அங்கே ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை.

அதைக்குறித்து அவர்கள் குழப்பமுற்றார்கள். அப்போது திடீரென, மின்னலைப்போன்று ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர் அவர்களுக்குத் தோன்றினர். இதனால் அப்பெண்கள் அச்சமுற்றுத் தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் அப்பெண்களை நோக்கி, “உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்? அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார். கலிலேயாவில் இருக்கும்போது அவர் உங்களுக்குச் சொன்னதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். மானிட மகன் பாவிகள் கையில் ஒப்புவிக்கப்பட்டுச் சிலுவையில் அறையப்பட வேண்டும்; மூன்றாம் நாளில் உயிர்த்தெழ வேண்டும் என்று சொன்னாரே” என்றார்கள்.

அப்போது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவில் கொண்டு, கல்லறையை விட்டுத் திரும்பிப்போய், இவை அனைத்தையும் பதினொருவருக்கும் மற்ற அனைவருக்கும் அறிவித்தார்கள். அவர்கள் மகதலா மரியா, யோவன்னா, யாக்கோபின் தாய் மரியா என்பவர்களும் அவர்களோடு இருந்த வேறு சில பெண்களும் ஆவர். அவர்கள் நிகழ்ந்தவற்றைத் திருத்தூதர்களுக்குக் கூறினார்கள். அவர்கள் கூற்று வெறும் பிதற்றலாகத் தோன்றியதால் திருத்தூதர்கள் அவர்களை நம்பவில்லை.

ஆனால் பேதுரு எழுந்து கல்லறைக்கு ஓடினார். அங்கு அவர் குனிந்து பார்த்தபோது, உடலைச் சுற்றியிருந்த துணிகளை மட்டுமே கண்டார்; நிகழ்ந்ததைக் குறித்துத் தமக்குள் வியப்புற்றவராய்த் திரும்பிச் சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல் 19 : திருமுகம்இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்.திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 3-11

ஏப்ரல் 19  :  திருமுகம்

இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 3-11
சகோதரர் சகோதரிகளே,

திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியாதா? இறந்த கிறிஸ்துவை மாட்சிமிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம்.

அவர் இறந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோ மெனில், அவர் உயிர்த்தெழுந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம். நாம் இனிமேல் பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடி, நம்முடைய பழைய மனித இயல்பு அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. இவ்வாறு பாவத்துக்கு உட்பட்டிருந்த நம் இயல்பு அழிந்துபோகும். இது நமக்குத் தெரியும். ஏனெனில் இறந்தோர் பாவத்தினின்று விடுதலை பெற்றுவிட்டனர் அன்றோ?

கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை. இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்; இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கிறோம். அவர் இறந்தார்; பாவத்தை ஒழிக்க ஒரே ஒரு முறை இறந்தார். இப்போது அவர் வாழ்கிறார்; அவர் கடவுளுக்காகவே வாழ்கிறார். அவ்வாறே, நீங்களும் பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்தவர்கள்; கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்கள் என்பதை எண்ணிக்கொள்ளுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 118: 1-2. 16ab-17. 22-23

பல்லவி: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

1
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
2
‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! - பல்லவி

16ab
ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.
17
நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன். - பல்லவி

22
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!
23
ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! - பல்ல

ஏப்ரல் 19 : பாஸ்கா திருவிழிப்பு ஏழாம் வாசகம்நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன்.இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 36: 16-17a, 18-28

ஏப்ரல் 19  :  பாஸ்கா திருவிழிப்பு 

ஏழாம் வாசகம்

நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 36: 16-17a, 18-28
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: மானிடா! இஸ்ரயேல் மக்கள் தங்கள் நாட்டில் வாழ்கையில் அவர்கள் தங்கள் நடத்தையாலும் செயல்களாலும் அதைத் தீட்டுப்படுத்தினார்கள். எனவே, நான் என் சினத்தை அவர்கள்மேல் கொட்டினேன். ஏனெனில் அவர்கள் அந்த நாட்டில் இரத்தம் சிந்தி, அதனைத் தெய்வச் சிலைகளால் தீட்டுப்படுத்தினர். நான் அவர்களை வேற்றினத்தாரிடையே சிதறடித்தேன். அவர்கள் நாடுகளெங்கும் சிதறுண்டு போயினர். அவர்களின் நடத்தைக்கேற்பவும், செயல்களுக்கேற்பவும் அவர்களுக்குத் தீர்ப்பிட்டேன். வேற்றினத்தாரிடையே அவர்கள் எங்குச் சென்றாலும் என் திருப்பெயரைத் தீட்டுப்படுத்தினர். ஏனெனில் அவர்களைக் குறித்து ‘இவர்கள் ஆண்டவரின் மக்களாக இருப்பினும், அவரின் நாட்டைவிட்டுப் போகவேண்டியதாயிற்று’ என்று கூறப்பட்டது. இஸ்ரயேல் வீட்டார் சென்ற வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரைக் குறித்து நான் கவலை கொண்டேன். எனவே இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே! இஸ்ரயேல் வீட்டாரே, நான் இவ்விதம் செயலாற்றுவது உங்களை முன்னிட்டு அல்ல. மாறாக, நீங்கள் சென்ற இடங்களில் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரை முன்னிட்டே இவ்விதம் செயலாற்றுகிறேன். நீங்கள் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் மாபெரும் பெயரை நான் புனிதப்படுத்துவேன். அப்போது உங்கள் வழியாய் அவர்கள் கண்முன்னே என் தூய்மையை நிலைநாட்டும்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நான் உங்களை வேற்றினத்தாரிடமிருந்து அழைத்து, பல நாடுகளிடையே கூட்டிச்சேர்த்து, உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொணர்வேன். நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும் தூய்மையாவீர்கள்; உங்கள் எல்லாச் சிலைவழிபாட்டுத் தீட்டையும் அகற்றுவேன். நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்.

உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்துவேன். என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். என் நியமங்களைக் கடைப்பிடிக்கவும் என் நீதிநெறிகளைக் கவனமாய்ச் செயல்படுத்தவும் செய்வேன். நான் உங்கள் முன்னோருக்குக் கொடுத்த நாட்டில் நீங்கள் வாழ்வீர்கள். அப்போது என் மக்களாய் இருப்பீர்கள். நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 42: 2, 4abc; 43: 3, 4 (பல்லவி: 42: 1)

பல்லவி: கடவுளே! என் நெஞ்சம் கலைமான் போல உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.

42:2
என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்?
4abc
மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து பவனியாகக் கடவுளின் இல்லத்திற்குச் சென்றேனே! ஆர்ப்பரிப்பும் நன்றிப் பாடல்களும் முழங்க விழாக்கூட்டத்தில் நடந்தேனே! - பல்லவி

43:3
உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும்; அவை என்னை வழி நடத்தி, உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும். - பல்லவி

4
அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்; என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்; கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன். - பல்லவி

ஏப்ரல் 19 : பாஸ்கா திருவிழிப்புஆறாம் வாசகம்ஆண்டவரின் ஒளியில் சீர்மையை நோக்கி நட.இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 3: 9-15, 32- 4: 4

ஏப்ரல் 19 :  பாஸ்கா திருவிழிப்பு

ஆறாம் வாசகம்

ஆண்டவரின் ஒளியில் சீர்மையை நோக்கி நட.

இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 3: 9-15, 32- 4: 4
இஸ்ரயேலே, வாழ்வுதரும் கட்டளைகளைக் கேள்; செவிசாய்த்து ஞானத்தைக் கற்றுக்கொள். இஸ்ரயேலே, நீ உன் பகைவரின் நாட்டில் இருப்பது ஏன்? வேற்று நாட்டில் நீ முதுமை அடைந்து வருவது ஏன்? இறந்தவர்களோடு உன்னையே தீட்டுப்படுத்திக் கொண்டது ஏன்? பாதாளத்திற்குச் செல்வோருடன் வைத்து நீயும் எண்ணப்படுவது ஏன்? ஞானத்தின் ஊற்றை நீ கைவிட்டாய். கடவுளின் வழியில் நீ நடந்திருந்தால், என்றென்றும் நீ அமைதியில் வாழ்ந்திருப்பாய். அறிவுத்திறன் எங்கே இருக்கிறது, ஆற்றல் எங்கே இருக்கிறது, அறிவுக்கூர்மை எங்கே இருக்கிறது எனக் கற்றுக்கொள். இதனால் நீண்ட ஆயுளும் வாழ்வும் எங்கே உள்ளன, கண்களுக்கு ஒளியும் அமைதியும் எங்கே உள்ளன எனவும் நீ அறிந்து கொள்வாய். ஞானத்தின் உறைவிடத்தைக் கண்டுபிடித்தவர் யார்? அதன் கருவூலங்களுக்குள் நுழைந்தவர் யார்?

ஆனால் எல்லாம் அறிபவர் ஞானத்தை அறிகின்றார்; தம் அறிவுக்கூர்மையால் அதைக் கண்டடைந்தார்; மண்ணுலகை எக்காலத்துக்கும் நிலைநாட்டினார்; அதைக் கால்நடைகளால் நிரப்பினார். அவர் ஒளியை அனுப்பினார்; அதுவும் சென்றது. அதைத் திரும்ப அழைத்தார்; அதுவும் நடுக்கத்துடன் அவருக்குப் பணிந்தது. விண்மீன்கள் தமக்குக் குறிக்கப்பட்ட இடங்களில் நின்று ஒளிவீசி மகிழ்ந்தன. அவர் அவற்றை அழைத்தார்; அவை, “இதோ, உள்ளோம்” என்றன; தங்களைப் படைத்தவருக்காக மகிழ்ச்சியோடு ஒளிவீசின.

இவரே நம் கடவுள், இவருக்கு இணையானவர் எவரும் இலர். மெய்யறிவின் வழி முழுவதும் கண்டவர் இவரே; தம் அடியார் யாக்கோபுக்கும், தாம் அன்புகூர்ந்த மகன் இஸ்ரயேலுக்கும் மெய்யறிவை ஈந்தவரும் இவரே. அதன் பின்னர் ஞானம் மண்ணுலகில் தோன்றிற்று; மனிதர் நடுவே குடிகொண்டது. ஞானமே கடவுளுடைய கட்டளைகள் அடங்கிய நூல்; என்றும் நிலைக்கக்கூடிய திருச்சட்டம். அதைக் கடைப்பிடிப்போர் அனைவரும் வாழ்வர்; அதைக் கைவிடுவோர் உயிரிழப்பர்.

யாக்கோபே, திரும்பி வா; ஞானத்தை ஏற்றுக்கொள்; அதன் ஒளியில் சீர்மையை நோக்கி நட. உனது மாட்சியை மற்றவருக்கு விட்டுக்கொடாதே; உன் சிறப்புரிமைகளை வேற்று மக்களினத்தாரிடம் இழந்துவிடாதே. இஸ்ரயேலே, நாம் பேறுபெற்றோர்; ஏனெனில் கடவுளுக்கு உகந்தது எது என்பதை நாம் அறிவோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 19: 7. 8. 9. 10 (பல்லவி: யோவா 6: 68)

பல்லவி: ஆண்டவரே, நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன.

7
ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர்அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. - பல்லவி

8
ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளி மயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. - பல்லவி

9
ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. - பல்லவி

10
அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை. - பல்லவி

ஏப்ரல் 19 : பாஸ்கா திருவிழிப்புஐந்தாம் வாசகம்என்னிடம் வாருங்கள்; நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றும் உள்ள உடன்படிக்கையைச் செய்துகொள்வேன்.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 1-11

ஏப்ரல் 19  :  பாஸ்கா திருவிழிப்பு

ஐந்தாம் வாசகம்

என்னிடம் வாருங்கள்; நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றும் உள்ள உடன்படிக்கையைச் செய்துகொள்வேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 1-11

ஆண்டவர் கூறுவது:
தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்; கையில் பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்; தானியத்தை வாங்கி உண்ணுங்கள், வாருங்கள், காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள். உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவு தராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்? எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்; நல்லுணவை உண்ணுங்கள்; கொழுத்ததை உண்டு மகிழுங்கள்.

எனக்குச் செவி கொடுங்கள், என்னிடம் வாருங்கள்; கேளுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றும் உள்ள உடன்படிக்கையைச் செய்துகொள்வேன்; தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன். நான் அவனை மக்களினங்களுக்குச் சாட்சியாகவும், வேற்றினங்களுக்குத் தலைவராகவும் தளபதியாகவும் ஏற்படுத்தினேன். இதோ, நீ அறியாத பிற இனமக்களை அழைப்பாய்; உன் கடவுளாகிய ஆண்டவரை, இஸ்ரயேலின் தூயவரை முன்னிட்டு, உன்னை அறியாத பிற இனத்தார் உன்னிடம் ஓடிவருவர். ஏனெனில், அவர் உன்னை மேன்மைப்படுத்தியுள்ளார்.

ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக; அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்; அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்; ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர். என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன.

மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

எசா 12: 2-3. 4bcd. 5-6 (பல்லவி: 3)

பல்லவி: மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்கள்.

2
இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே.
3
மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள். - பல்லவி

4bcd
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர்செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். - பல்லவி

5
ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்துகொள்வதாக.
6
சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரிந்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். - பல்லவி

ஏப்ரல் 19 : பாஸ்கா திருவிழிப்பு நான்காம் வாசகம்என்றுமுள்ள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன்.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 54: 5-14

ஏப்ரல் 19  : பாஸ்கா திருவிழிப்பு 

நான்காம் வாசகம்

என்றுமுள்ள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 54: 5-14
ஆண்டவர் கூறுவது:

உன்னை உருவாக்கியவரே உன் கணவர், ‘படைகளின் ஆண்டவர்’ என்பது அவர்தம் பெயராம். இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்; ‘உலக முழுமைக்கும் கடவுள்’ என அவர் அழைக்கப்படுகின்றார். ஏனெனில், கைவிடப்பட்டு மனமுடைந்துபோன துணைவிபோலும், தள்ளப்பட்ட இளம் மனைவி போலும் இருக்கும் உன்னை ஆண்டவர் அழைத்துள்ளார், என்கிறார் உன் கடவுள். நொடிப்பொழுதே நான் உன்னைக் கைவிட்டேன்; ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன். பொங்கியெழும் சீற்றத்தால் இமைப்பொழுதே என் முகத்தை உனக்கு மறைத்தேன்; ஆயினும் என்றும் உள்ள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன், என்கிறார் ஆண்டவர்.

எனக்கு இது நோவாவின் நாள்களில் நடந்ததுபோல் உள்ளது; நோவாவின் காலத்துப் பெருவெள்ளம் இனி மண்ணுலகின்மேல் பாய்ந்து வராது என்று நான் ஆணையிட்டேன்; அவ்வாறே உன்மீதும் சீற்றம் அடையமாட்டேன் என்றும், உன்னைக் கண்டிக்கமாட்டேன் என்றும் ஆணையிட்டுக் கூறியுள்ளேன். மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது; என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது, என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர்.

துயருற்றவளே, சூறைக்காற்றால் அலைக்கழிக்கப்பட்டவளே, ஆறுதல் பெறாது தவிப்பவளே, இதோ, மாணிக்கக் கற்களால் உன் அடித்தளத்தை அமைப்பேன், நீலக் கற்களால் உன் நிலைக்களத்தை நிறுவுவேன். உன் கால்மாடங்களைச் சிவப்புக் கற்களாலும், உன் வாயில்களைப் பளிங்குக் கற்களாலும் உன் மதில்கள் அனைத்தையும் விலையுயர்ந்த கற்களாலும் கட்டுவேன். உன் குழந்தைகள் அனைவருக்கும் ஆண்டவர்தாமே கற்றுத்தருவார்; உன் பிள்ளைகள் நிறைவாழ்வு பெற்றுச் சிறப்புறுவர். நேர்மையில் நீ நீலைநாட்டப்படுவாய்; ஒடுக்கப்பட்ட நிலை உன்னைவிட்டு அகன்றுபோம்; நீ அஞ்சாதே! திகில் உன்னை அணுகாது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 30: 1,3. 4-5. 10,11a,12b (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்; ஏனெனில், என்னைக் கைதூக்கிவிட்டீர்;

1
ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.
3
ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக்குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். - பல்லவி

4
இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்.
5
அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. - பல்லவி

10
ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.
11a
நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்;
12b
என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். - பல்லவி