அக்டோபர் 27 : முதல் வாசகம்
திருமணம் பற்றிய இம்மறைபொருள் பெரிது.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 21-33
சகோதரர் சகோதரிகளே,
கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள். திருமணமான பெண்களே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பது போல உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பது போலக் கணவர் மனைவிக்குத் தலையாய் இருக்கிறார். கிறிஸ்துவே திருச்சபையாகிய உடலின் மீட்பர். திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பது போல, மனைவியரும் தங்கள் கணவருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும்.
திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச்சபை மீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபை மீது அன்பு செலுத்தி, அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார். வார்த்தையாலும் நீரினாலும் அதனைக் கழுவித் தூயதாக்குமாறு இவ்வாறு செய்தார். அத்திருச்சபை, கறைதிரையோ, வேறு எக்குறையோ இல்லாமல் தூய்மையும் மாசற்றதுமாய் மாட்சியுடன் தம்முன் விளங்குமாறு இப்படிச் செய்தார்.
அவ்வாறே கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள். தம் மனைவியின் மீது அன்பு கொள்கிறவர், தம்மீதே அன்பு கொள்கிறவர் ஆவார். தம்முடைய உடலை எவரும் வெறுப்பதில்லை. அதைப் பேணி வளர்க்கிறார். அவ்வாறே, கிறிஸ்துவும் திருச்சபையைப் பேணி வளர்த்து வருகிறார். ஏனெனில் நாம் அவரது உடலின் உறுப்புகள். “இதனால் கணவர் தம் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தம் மனைவியுடன் ஒன்றித்திருப்பார்; இருவரும் ஒரே உடலாயிருப்பர்” என மறைநூல் கூறுகிறது.
இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது. இது திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பொருந்துவதாகக் கொள்கிறேன்.
எப்படியும், உங்களுள் ஒவ்வொருவரும் தம்மீது அன்புகொள்வது போலத் தம் மனைவியின்மீதும் அன்பு செலுத்த வேண்டும். மனைவியும் தம் கணவருக்கு அஞ்சி வாழ வேண்டும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment