*🌿நவம்பர் 30 அப்போஸ்தலரான புனித அந்திரேயா விழா*
*முதல் வாசகம்*
_`ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்புப் பெறுவர்''_
*திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 10: 9-18*
சகோதரர் சகோதரிகளே, `இயேசு ஆண்டவர்' என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள். இவ்வாறு உள்ளூர நம்புவோர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவர்; வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர். ஏனெனில், ``அவர்மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார்'' என்பது மறைநூல் கூற்று. இதில் யூதர் என்றோ கிரேக்கர் என்றோ வேறுபாடில்லை; அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகிறார். ``ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்புப் பெறுவர்'' என்று எழுதியுள்ளது அல்லவா? ஆனால் அவர்மீது நம்பிக்கை கொண்டிருந்தாலன்றி, அவர்கள் எவ்வாறு அவரை நோக்கி மன்றாடுவார்கள்? தாங்கள் கேள்வியுறாத ஒருவர்மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்? அறிவிக்கப்படாத ஒன்று பற்றி அவர்கள் எவ்வாறு கேள்வியுறுவார்கள்? அனுப்பப்படாமல் அவர்கள் எவ்வாறு அறிவிப்பார்கள்? இதைப் பற்றியே, ``நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் எத்துணை அழகாய் இருக்கின்றன'' என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆயினும் எல்லாருமே நற்செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை. இதைக் குறித்தே எசாயா, ``ஆண்டவரே, நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்?'' என்று முறையிடுகிறார். ஆகவே அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும். கிறிஸ்துவைப் பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டால்தான் அதைக் கேட்க வாய்ப்புண்டு. அப்படியானால், அவர்கள் கேள்விப்படவில்லை என்று சொல்ல முடியுமோ? எப்படிச் சொல்ல முடியும்? ஏனெனில், ``அவர்களது அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவர்கள் கூறும் செய்தி உலகின் கடை எல்லை வரை எட்டுகின்றது.''
*இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.*
No comments:
Post a Comment