நவம்பர் 11 : முதல் வாசகம்
தம் இரக்கத்தை முன்னிட்டு கடவுள் நம்மை மீட்டார்.
திருத்தூதர் பவுல் தீத்துக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-7
அன்பிற்குரியவரே,
நீ அவர்களுக்கு நினைவூட்ட வேண்டியவை: தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அவர்கள் பணிந்து கீழ்ப்படிய வேண்டும்; அனைத்து நற்செயல்களையும் செய்ய ஆயத்தமாயிருக்க வேண்டும். எவரையும் பழித்துரைக்கலாகாது; சண்டையிடலாகாது; கனிந்த உள்ளத்தினராய் மக்கள் அனைவரோடும் நிறைந்த பணிவுடன் பழக வேண்டும். ஏனெனில் நாமும் ஒரு காலத்தில் அறியாமையில் இருந்தோம்; கீழ்ப்படியாமல் இருந்தோம்; நெறிதவறிச் சென்றோம்; தீய நாட்டங்களுக்கும் பல்வகைச் சிற்றின்பங்களுக்கும் அடிமைகளாய் இருந்தோம்; தீமையிலும் பொறாமையிலும் உழன்றோம்; காழ்ப்புணர்ச்சி கொண்டவராய் ஒருவர் மற்றவரை வெறுத்தோம்.
நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார். அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார். நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப்பேறாகப் பெறும்பொருட்டே இவ்வாறு செய்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment