*பொதுக்காலம் 34ஆம் வாரம் – புதன் 25/11/2020*
*முதல் வாசகம்*
_கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியின் பாடலையும் பாடிக்கொண்டிருந்தார்கள்._
*திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 15: 1-4*
சகோதரர் சகோதரிகளே,
யோவான் என்னும் நான் பெரியதும் வியப்புக்குரியதுமான மற்றோர் அடையாளத்தை விண்ணகத்தில் கண்டேன்: ஏழு வானதூதர்கள் ஏழு வாதைகளைக் கொண்டிருந்தார்கள். இறுதியான அந்த வாதைகளோடு கடவுளின் சீற்றம் முற்றிலும் தணியும்.
நெருப்போடு கலந்த கண்ணாடிக் கடல் போன்ற ஒன்றையும் கண்டேன். தொடர்ந்து, விலங்கின் மீதும் அதன் சிலை மீதும் எண்ணால் குறிக்கப்பெற்ற அந்த ஆள் மீதும் வெற்றி பெற்றவர்கள், கடவுள் கொடுத்திருந்த யாழ்களை ஏந்திய வண்ணம் கண்ணாடிக் கடல் அருகே நின்றுகொண்டிருக்கக் கண்டேன். அவர்கள் கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியின் பாடலையும் பாடிக் கொண்டிருந்தார்கள்:
“கடவுளாகிய ஆண்டவரே, எல்லாம் வல்லவரே, உம் செயல்கள் பெரியன, வியப்புக்குரியன. மக்களினங்களின் மன்னரே, உம் வழிகள் நேரியவை, உண்மையுள்ளவை. ஆண்டவரே, உமக்கு அஞ்சாதவர் யார்? உமது பெயரைப் போற்றிப் புகழாதார் யார்? நீர் ஒருவரே தூயவர், எல்லா மக்களினங்களும் உம் திருமுன் வந்து வணங்கும். ஏனெனில் உம் நீதிச் செயல்கள் வெளிப்படையாயின.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment