_🍁14/12/2020, திருவருகைக் காலம் மூன்றாம் வாரம் திங்கள்_
*முதல் வாசகம்*
_யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்._
*எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 24: 2-7,15-17*
அந்நாள்களில் பிலயாம் ஏறிட்டுப் பார்க்கவே, குலம் குலமாகப் பாளையம் இறங்கிய இஸ்ரயேலைக் கண்டார். அப்போது கடவுளின் ஆவி அவர்மேல் இறங்கியது. அவர் திருஉரையாகக் கூறியது: பெகோர் புதல்வன் பிலயாமின் திருமொழி! கண் திறக்கப்பட்டவனின் திருமொழி! கடவுளின் வார்த்தைகளைக் கேட்கிறவனின், பேராற்றல் வாய்ந்தவரின் காட்சியைக் கண்டு கீழே விழுந்தும் கண் மூடாதவனின் திருமொழி! யாக்கோபே! உன் கூடாரங்களும், இஸ்ரயேலே! உன் இருப்பிடங்களும் எத்துணை அழகு வாய்ந்தவை! அவை விரிந்து கிடக்கும் பள்ளத்தாக்குகள் போன்றவை; ஆண்டவர் நட்ட அகில் மரங்கள் போன்றவை; நீர் அருகிலுள்ள கேதுரு மரங்கள் போன்றவை. அவனுடைய நீர்க்கால்களிலிருந்து தண்ணீர் ஓடும்; அவனது விதை நீர்த்திரளின்மேல் இருக்கும்; அவனுடைய அரசன் ஆகாகைவிடப் பெரியவன்; அவனது அரசு உயர்த்தப்படும்.'' பிலயாம் திருஉரையாகக் கூறியது: பெகோரின் புதல்வன் பிலயாமின் திருமொழி! கண் திறக்கப்பட்டவனின் திருமொழி! கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதர் அளித்த அறிவைப் பெற்று பேராற்றல் உடையவரின் காட்சி கண்டு கீழே வீழ்ந்தும் கண் மூடப்படாதவனின் திருமொழி! நான் அவரைக் காண்பேன்; ஆனால் இப்போதன்று; நான் அவரைப் பார்ப்பேன்; ஆனால் அண்மையிலன்று; யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்! இஸ்ரயேலிலிருந்து செங்கோல் ஒன்று எழும்பும்!''
*இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக