Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Wednesday, January 13, 2021

14/01/2021பொங்கல் விழா வாசகங்கள் 🎈முதல் வாசகம் பழைய ஏற்பாட்டிலிருந்து (1)📖ஆற்றலை உங்களுக்கு அளித்த,உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நினைவில் கொள்ளுங்கள். இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 8: 7-18

14/01/2021
பொங்கல் விழா வாசகங்கள் 🎈

முதல் வாசகம் 

பழைய ஏற்பாட்டிலிருந்து 

(1)📖

ஆற்றலை உங்களுக்கு அளித்த,
உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நினைவில் கொள்ளுங்கள். 

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 8: 7-18 
அந்நாள்களில் 

மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை வளமிகு நாட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அந்த நாடு பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் பாய்கின்ற ஆறுகளையும் ஊற்றுகளையும் ஏரிகளையும் கொண்டது. கோதுமை, திராட்சை, அத்தி, மாதுளை, பார்லி ஆகியவை நிறைந்த நாடு. அது ஒலிவ எண்ணெயும் தேனும் நிறைந்த நாடு. அந்த நாட்டில் பஞ்சமின்றி நீங்கள் அப்பங்களை உண்பீர்கள். அங்கு உங்களுக்கு எந்தக் குறையும் இராது. அந்த நாட்டின் பாறைகள் அனைத்தும் இரும்பு. அதன் மலைகளிலிருந்து செம்பு வெட்டி எடுக்கலாம். நீங்கள் உண்டு நிறைவு கொள்வீர்கள். அப்போது, வளமிகு நாட்டை உங்களுக்குக் கொடுத்ததற்காக உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவீர்கள். 

இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்ற கட்டளைகள், நியமங்கள், முறைமைகள் ஆகியவற்றினின்று வழுவியதன் மூலம் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து போகாதபடி கவனமாய் இருங்கள். 

நீங்கள் உண்டு நிறைவுகொள்ளும்போதும், அழகிய வீடுகளைக் கட்டி அவைகளில் குடியிருக்கும்போதும், உங்கள் ஆடுமாடுகள் பலுகும்போதும், வெள்ளியும் பொன்னும் உங்களுக்கு மிகுதியாகும் போதும், உங்களுக்கு உள்ளதெல்லாம் பெருகும்போதும், நீங்கள் நெஞ்சில் செருக்குற்று, அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்துவிட வேண்டாம். அவரே, கொள்ளிவாய்ப் பாம்புகளும் தேள்களும் நிறைந்த, நீரற்று வறண்ட நிலமான பரந்த கொடிய பாலை நிலத்தில் உங்களை வழிநடத்தியவர்; இறுகிய பாறையிலிருந்து உங்களுக்காக நீரைப் புறப்படச் செய்தவர். உங்கள் மூதாதையருக்குத் தெரிந்திராத மன்னாவால் பாலை நிலத்தில் உங்களை உண்பித்தவர்; இறுதியில் உங்களுக்கு நல்லது செய்வதற்காக உங்களை எளியவராக்கிச் சிறுமைப்படுத்திச் சோதித்தவரும் அவரே. 

எனவே, எங்கள் ஆற்றலும் எங்கள் கைகளின் வலிமையுமே இந்தச் செல்வங்களை எங்களுக்கு ஈட்டித் தந்தன என்று உங்கள் உள்ளங்களில் எண்ணாதபடி கவனமாய் இருங்கள். உங்கள் மூதாதையருடன் ஆணையிட்டுச் செய்துகொண்ட உடன்படிக்கையை உறுதிப்படுத்துமாறு, இந்நாளில் இருப்பது போன்ற செல்வங்களை ஈட்ட வல்ல ஆற்றலை உங்களுக்கு அளித்த, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நினைவில் கொள்ளுங்கள். 

ஆண்டவரின் அருள்வாக்கு. 

  
_____

(2)📖

போரடிக்கும் களங்களில் கோதுமை நிறைந்திருக்கும். 

இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 2: 21-24, 26-27 

நிலமே நீ அஞ்சாதே; மகிழ்ந்து களிகூரு; ஏனெனில், ஆண்டவர் பெரிய காரியங்களைச் செய்தார். காட்டு விலங்குகளே, அஞ்சாதிருங்கள்; ஏனெனில் பாலை நிலப் புல்வெளிகள் பசுமையாய் இருக்கின்றன; மரங்கள் கனி தருகின்றன; அத்தி மரமும் திராட்சைக் கொடியும் மிகுந்த கனி கொடுக்கின்றன. 

சீயோனின் பிள்ளைகளே, அகமகிழுங்கள்; உங்கள் கடவுளாகிய ஆண்டவரை முன்னிட்டுக் களிப்படையுங்கள்; ஏனெனில், அவர் தமது நீதியை நிலைநாட்ட உங்களுக்கு முன்மாரியைத் தந்தார்; முன் போலவே உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் நிறைவாகத் தந்தருளினார். 

போரடிக்கும் களங்களில் கோதுமை நிறைந்திருக்கும்; ஆலைகளில் திராட்சை இரசமும் எண்ணெயும் வழிந்தோடும். நீங்கள் வேண்டியமட்டும் உண்டு நிறைவடைவீர்கள்; உங்களை வியத்தகு முறையில் நடத்தி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைப் போற்றுவீர்கள்; இனி மேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாக மாட்டார்கள். 

இஸ்ரயேல் நடுவில் நான் இருக்கிறேன் என்றும், ஆண்டவராகிய நானே உங்கள் கடவுள் என்றும் என்னையன்றி வேறு எவரும் இல்லை என்றும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்; இனி மேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாக மாட்டார்கள். 

ஆண்டவரின் அருள்வாக்கு. 

  _______

புதிய ஏற்பாட்டிலிருந்து வாசகங்கள் 📖

(3)📖

கடவுளே விளையச் செய்தார். 

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 6-10 

சகோதரர் சகோதரிகளே, 

நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளே விளையச் செய்தார். நடுகிறவருக்கும் பெருமை இல்லை; நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை; விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை. நடுகிறவரானாலும் நீர் பாய்ச்சுகிறவரானாலும் ஒன்றுதான். தாம் செய்த வேலைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் தம் கூலியைப் பெறுவர். நாங்கள் கடவுளின் உடன் உழைப்பாளர்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் தோட்டம். நீங்கள் அவர் எழுப்பும் கட்டடம். 

கடவுள் எனக்கு அளித்த அருளின்படியே, நான் கைதேர்ந்த கட்டடக் கலைஞர் போல அடித்தளம் இட்டேன். அதன் மேல் வேறொருவர் கட்டுகிறார். ஒவ்வொருவரும் தாம் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும். 

ஆண்டவரின் அருள்வாக்கு. 

  _______

(4)📖

செல்வர்களாய் இருப்பவர்கள் நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைத்தலாகாது. 

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 6-11, 17-19 

அன்பிற்குரியவரே, 

இறைப்பற்று பெரும் ஆதாயம் தருவதுதான்; ஆனால் மனநிறைவு உள்ளவர்களுக்கே தரும். உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்தது இல்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது. எனவே, உணவும் உடையும் நமக்கு இருந்தால் அவற்றில் நாம் மனநிறைவு கொள்வோம். 

செல்வத்தைச் சேர்க்க விரும்புபவர்கள் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக் கொள்கிறார்கள்; அறிவீனமான, தீமை விளைவிக்கக்கூடிய பல்வேறு தீய நாட்டங்களில் வீழ்ந்து விடுகிறார்கள். இவை மனிதரைக் கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்துபவை. பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளைத் தாங்களாகவே தங்கள் மேல் வருவித்துக்கொள்கிறார்கள். 

கடவுளின் மனிதனாகிய நீ, இவற்றிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடு. 

இவ்வுலகில் செல்வர்களாய் இருப்பவர்களுக்கு இவ்வாறு கட்டளையிடு: அவர்கள் மேட்டிமை உணர்வு கொள்ளலாகாது. நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல், நம்முடைய இன்பத்திற்காகவே எல்லாவற்றையும் நிறைவாக அளிக்கும் கடவுளை மட்டுமே எதிர்நோக்கி இருக்க வேண்டும். அவர்கள் நல்லதைச் செய்து நற்செயல்கள் என்னும் செல்வத்தைச் சேர்ப்பார்களாக; தங்களுக்கு உள்ளதைத் தாராள மனத்தோடு பகிர்ந்தளிப்பார்களாக. இவ்வாறு அவர்கள் தங்களது வருங்காலத்திற்கு என்று நல்லதோர் அடித்தளமாக இச்செல்வத்தைச் சேமித்து வைப்பதால் உண்மையான வாழ்வை அடைய முடியும். 

ஆண்டவரின் அருள்வாக்கு.

No comments:

Post a Comment