மார்ச் 31 : நற்செய்தி வாசகம்
மானிடமகன், தம்மைப்பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 26 : 14-25
அக்காலத்தில்
பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, ‘‘இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?” என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.
புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து, ‘‘நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்யவேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், ‘‘நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், ‘எனது நேரம் நெருங்கி வந்துவிட்டது; என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப்போகிறேன்’ எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள்” என்றார். இயேசு தங்களுக்குப் பணித்தபடியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார். அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர், ‘‘உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், ‘‘ஆண்டவரே, அது நானோ?” என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள். அதற்கு அவர், ‘‘என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். மானிடமகன், தம்மைப்பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்” என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் ‘‘ரபி, நானோ?” என அவரிடம் கேட்க, இயேசு, ‘‘நீயே சொல்லிவிட்டாய்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
---------
No comments:
Post a Comment