நவம்பர் 17 : முதல் வாசகம்
உலகைப் படைத்தவரே உங்களுக்கு உயிரையும் மூச்சையும் மீண்டும் கொடுப்பார்.
மக்கபேயர் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1, 20-31
அந்நாள்களில்
சகோதரர்கள் எழுவரும் அவர்களுடைய தாயும் கைது செய்யப்பட்டார்கள்; சாட்டைகளாலும் வார்களாலும் அடிக்கப்பட்டுச் சட்டத்துக்கு முரணாகப் பன்றி இறைச்சியை உண்ணும்படி மன்னனால் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
எல்லாருக்கும் மேலாக, அவர்களுடைய தாய் மிகவும் போற்றுதற்குரியவர், பெரும் புகழுக்குரியவர். ஒரே நாளில் தம் ஏழு மைந்தர்களும் கொல்லப்பட்டதை அவர் கண்ட போதிலும், ஆண்டவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையால் அவை அனைத்தையும் மிகத் துணிவோடு தாங்கிக் கொண்டார்; அவர்கள் ஒவ்வொருவருக்கும் தாய்மொழியில் அறிவுரை கூறினார்.
பெருந்தன்மை நிறைந்தவராய்ப் பெண்ணுக்குரிய பண்பையும் ஆணுக்குரிய துணிவையும் இணைத்து அவர்களிடம், “நீங்கள் என் வயிற்றில் எவ்வாறு உருவானீர்கள் என நான் அறியேன்; உங்களுக்கு உயிரும் மூச்சும் அளித்ததும் நான் அல்ல; உங்களுடைய உள்ளுறுப்புகளை ஒன்றுசேர்த்ததும் நான் அல்ல. உலகைப் படைத்தவரே மனித இனத்தை உருவாக்கியவர்; எல்லாப் பொருள்களையும் உண்டாக்கியவர்; அவரே தம் இரக்கத்தினால் உங்களுக்கு உயிரையும் மூச்சையும் மீண்டும் கொடுப்பார்; ஏனெனில் அவருடைய சட்டங்களை முன்னிட்டு நீங்கள் இப்போது உங்களையே பொருட்படுத்துவதில்லை” என்றார்.
தாம் இகழப்படுவதாக அந்தியோக்கு நினைத்தான்; அந்தத் தாயின் கூற்றில் ஏளனம் இருப்பதாக ஐயுற்றான்; எல்லாருக்கும் இளைய சகோதரர் இன்னும் உயிரோடு இருக்கக் கண்டு, “உன் மூதாதையரின் பழக்க வழக்கங்களை நீ கைவிட்டு விட்டால், உன்னைச் செல்வனாகவும் பிறர் அழுக்காறு கொள்ளும் வகையில் உயர்ந்தவனாகவும் ஆக்குவதோடு, என் நண்பனாகவும் ஏற்றுக் கொண்டு உனக்கு உயர்பதவி வழங்குவேன்” என்று சொன்னது மட்டுமன்றி உறுதியும் கூறி ஆணையிட்டான். அவ்விளைஞர் மன்னனின் சொற்களுக்குச் சிறிதும் செவிசாய்க்காததால், அவருடைய தாயை அவன் தன்னிடம் அழைத்து அந்த இளைஞர் தம்மையே காத்துக் கொள்ளும்படி அறிவுரை கூறுமாறு வேண்டினான்.
மன்னன் அவரை மிகவும் வேண்டிக்கொண்டதனால், அந்தத் தாய் தம் மகனை இணங்க வைக்க இசைந்தார். ஆனால் அந்தக் கொடுங்கோலனை ஏளனம் செய்தவராய், அவர் தம் மகன் பக்கம் குனிந்தவாறு தம் தாய்மொழியில், “மகனே, என்மீது இரக்கங்கொள். ஒன்பது மாதம் உன்னை என் வயிற்றில் சுமந்தேன்; முன்று ஆண்டு உனக்குப் பாலூட்டி வளர்த்தேன்; இந்த வயது வரை உன்னைப் பேணிக்காத்து வந்துள்ளேன். குழந்தாய், உன்னை நான் வேண்டுவது: விண்ணையும் மண்ணையும் பார்; அவற்றில் உள்ள அனைத்தையும் உற்று நோக்கு. கடவுள் இவை அனைத்தையும் ஏற்கெனவே இருந்தவற்றிலிருந்து உண்டாக்கவில்லை. இவ்வாறே மனித இனமும் தோன்றிற்று என்பதை அறிந்து கொள்வாய். இக்கொலைஞனுக்கு அஞ்சாதே; ஆனால் நீ உன் சகோதரர்களுக்கு ஏற்றவன் என மெய்ப்பித்துக் காட்டு. இறைவனின் இரக்கத்தால் உன் சகோதரர்களோடு உன்னையும் நான் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி இப்போது சாவை ஏற்றுக்கொள்” என்று சொல்லி ஊக்கமூட்டினார்.
தாய் பேசி முடிப்பதற்குள் அந்த இளைஞர் பின்வருமாறு கூறினார்: “எதற்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? மன்னனின் கட்டளைக்கு நான் கீழ்ப்படியமாட்டேன். மோசே வழியாக எங்கள் மூதாதையருக்குக் கொடுக்கப்பட்ட திருச்சட்டத்தின் கட்டளைகளுக்கே கீழ்ப்படிவேன். எபிரேயருக்கு எதிராக எல்லா வகைத் துன்பங்களையும் திட்டமிட்ட நீ, கடவுளின் கைக்குத் தப்பமாட்டாய்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment