சனவரி 13 : முதல் வாசகம்
கடவுளின் பேழை பிடிபட்டது. இஸ்ரயேலர் தோற்கடிக்கப்பட்டனர்.
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 4: 1-11
அந்நாள்களில்
இஸ்ரயேலர் பெலிஸ்தியருக்கு எதிராகப் போர்தொடுத்து, எபனேசரில் பாளையம் இறங்கினர், பெலிஸ்தியரும் அபேக்கில் பாளையம் இறங்கினர். பெலிஸ்தியர் இஸ்ரயேலருக்கு எதிராக அணிவகுத்துச் செல்ல, போர் மூண்டது. பெலிஸ்தியர் இஸ்ரயேலரை முறியடித்து அவர்களுள் நாலாயிரம் பேரைப் போர்க்களத்தில் வெட்டி வீழ்த்தினர்.
வீரர்கள் பாளையத்திற்குத் திரும்பியபோது, இஸ்ரயேலின் பெரியோர் கூறியது: “இன்று பெலிஸ்தியரிடம் நம்மை ஆண்டவர் தோல்வியுறச் செய்தது ஏன்? ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை சீலோவினின்று நம்மிடையே கொண்டு வருவோம். அது நம்மிடையே வந்தால், நம் எதிரிகள் கையினின்று நம்மைக் காக்கும்”.
ஆகவே வீரர்கள் சீலோவுக்கு ஆள்களை அனுப்பி, கெருபுகளின்மீது வீற்றிருக்கும் படைகளின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையை அங்கிருந்து கொண்டுவரச் செய்தனர். ஏலியின் இரு புதல்வர்களான ஒப்னியும் பினகாசும் கடவுளின் உடன்படிக்கைப் பேழையோடு இருந்தனர். ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை பாளையத்திற்குள் வந்ததும், இஸ்ரயேலர் அனைவரும் நிலமே அதிரும் அளவிற்குப் பெரும் ஆரவாரம் செய்தனர்.
இந்த ஆரவாரத்தைக் கேட்டதும் பெலிஸ்தியர், “எபிரேயரின் பாளையத்தில் இப்பெரும் ஆரவாரமும் கூச்சலும் ஏன்?” என்று வினவினர். ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை பாளையத்தினுள் வந்துவிட்டது என்று அறிந்து கொண்டனர். அப்போது பெலிஸ்தியர் பேரச்சம் கொண்டு, “கடவுள் பாளையத்திற்குள் வந்துவிட்டார். நமக்கு ஐயோ கேடு! இதற்கு முன்பு இப்படி நேர்ந்ததே இல்லை! நமக்கு ஐயோ கேடு! இத்துணை வலிமைமிகு கடவுளிடமிருந்து நம்மைக் காப்பவர் யார்? இக்கடவுள்தான் எகிப்தியரைப் பாலைநிலத்தில் பல்வேறு வாதைகளால் துன்புறுத்தியவர்! பெலிஸ்தியரே! துணிவு கொள்ளுங்கள்! ஆண்மையோடு இருங்கள்! எபிரேயர் உங்களுக்கு அடிமைகளாக இருந்தது போல, நீங்களும் எபிரேயருக்கு அடிமைகளாக ஆகாதபடிக்கு ஆண்மையோடு போரிடுங்கள்!” என்றனர்.
பெலிஸ்தியர் மீண்டும் போர்தொடுத்தனர். இஸ்ரயேலர் தோல்வியுற, அவர்களுள் ஒவ்வொருவனும் தன் கூடாரத்திற்குத் தப்பியோடினான். அன்று மாபெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இஸ்ரயேலருள் முப்பதாயிரம் காலாட்படையினர் மாண்டனர். கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டது. ஏலியின் இரு புதல்வர்கள் ஒப்னியும் பினகாசும் மாண்டனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment