சனவரி 17 : முதல் வாசகம்
கீழ்ப்படிதலே பலிகளை விடச் சிறந்தது.
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 15: 16-23
அந்நாள்களில்
சாமுவேல் சவுலை நோக்கி, “நிறுத்தும், இன்றிரவு ஆண்டவர் எனக்குக் கூறியவற்றை உமக்குச் சொல்கிறேன்” என, சவுல், “சொல்லுங்கள்” என்றார். சாமுவேல் கூறியது: “நீர் உமது பார்வைக்கே சிறியவராய் இருந்த போதல்லவா இஸ்ரயேல் குலங்களுக்குத் தலைவர் ஆனீர்? ஆண்டவரும் உம்மை இஸ்ரயேலின் அரசராகத் திருப்பொழிவு செய்தார். ஆண்டவர் உமக்கு வழிகாட்டி, ‘நீ சென்று அந்தப் பாவிகளான அமலேக்கியரை அழித்துவிட்டு வா. இறுதிவரை போரிட்டு அவர்களை ஒழித்துவிடு’ என்று சொன்னார். அப்படியிருக்க, நீர் ஏன் ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை? கொள்ளைப்பொருள்மீது பாய்ந்து ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்ததேன்?”
அதற்குச் சவுல், சாமுவேலை நோக்கி, “ஆண்டவரின் குரலுக்கு நான் செவிகொடுத்தேன், அவர் காட்டிய வழியிலும் சென்றேன். அமலேக்கியரின் மன்னன் ஆகாகைக் கொண்டு வந்தேன். ஆனால் அமலேக்கியரை அழித்துவிட்டேன். ஆனால் வீரர்கள் உம் கடவுளாகிய ஆண்டவருக்குக் கில்காலில் பலி செலுத்த, தடை செய்யப்பட்ட கொள்ளைப் பொருளினின்று சிறந்த ஆடுகளையும், மாடுகளையும் கொண்டு வந்தனர்” என்றார்.
அப்போது சாமுவேல் கூறியது: “ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது எரிபலிகள், பிற பலிகள் செலுத்துவதா? அவரது குரலுக்குக் கீழ்ப்படிவதா? கீழ்ப்படிதல் பலியை விடச் சிறந்தது, கீழ்ப்படிதல் ஆட்டுக் கிடாய்களின் கொழுப்பை விட மேலானது! கலகம் சூனியத்திற்கு நிகரான பாவம்! முரட்டுத்தனம் சிலைவழிபாட்டுக்கு ஒப்பான குற்றம். நீர் ஆண்டவரின் வார்த்தையைப் புறக்கணித்தீர்! அவரும் உம்மை அரச பதவியினின்று நீக்கிவிட்டார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment