சனவரி 18 : முதல் வாசகம்
தாவீதைச் சாமுவேல் திருப்பொழிவு செய்தார். ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது.
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 16: 1-13
அந்நாள்களில்
ஆண்டவர் சாமுவேலை நோக்கி, “இஸ்ரயேலின் அரசராகச் சவுல் இல்லாதவாறு நான் அவனைப் புறக்கணித்ததை நீ அறிந்திருந்தும், நீ எவ்வளவு காலம் அவனுக்காகத் துக்கம் கொண்டாடுவாய்? உன்னிடமுள்ள கொம்பை எண்ணெயால் நிரப்பிக் கொண்டு போ. பெத்லகேமைச் சார்ந்த ஈசாயிடம் உன்னை அனுப்புகிறேன்; ஏனெனில் அவன் புதல்வருள் ஒருவனை அரசனாகத் தேர்ந்துள்ளேன்” என்றார். அதற்குச் சாமுவேல், “எப்படிப் போவேன்? சவுல் கேள்விப்பட்டால், என்னைக் கொன்று விடுவானே?” என்றார். மீண்டும் ஆண்டவர், “நீ ஒரு கன்றுக்குட்டியை எடுத்துச் செல்! ‘ஆண்டவருக்குப் பலியிட வந்துள்ளேன்’ என்று சொல்; ஈசாயைப் பலிக்கு அழைத்திடு. அப்பொழுது நீ செய்ய வேண்டியது என்னவென்று உனக்கு நான் தெரிவிப்பேன்; நான் உனக்குக் காட்டுகிறவனை நீ எனக்காகத் திருப்பொழிவு செய்” என்றார்.
ஆண்டவர் கட்டளையிட்டவாறு சாமுவேல் செய்த பின் பெத்லகேமுக்குச் சென்றார். அப்பொழுது அவ்வூரின் பெரியோர்கள் அஞ்சி நடுங்கி அவரை எதிர்கொண்டு வந்து, “உங்கள் வருகையின் நோக்கம் சமாதானம் தானே” என்று கேட்டனர். அதற்கு அவர், “ஆம் சமாதானம் தான்; ஆண்டவருக்குப் பலிசெலுத்த வந்துள்ளேன்; உங்களையே தூய்மையாக்கிக் கொண்டு என்னுடன் பலியிட வாருங்கள்” என்றார். மேலும் ஈசாயையும் அவர் புதல்வரையும் தூய்மைப்படுத்திப் பலியிட வருமாறு அழைத்தார்.
அவர்கள் வந்தபோது அவர் எலியாவைப் பார்த்தவுடனே, “ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும்” என்று எண்ணினார். ஆனால் ஆண்டவர் சாமுவேலிடம், “அவன் தோற்றத்தையும் உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில் நான் அவனைப் புறக்கணித்து விட்டேன். மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை; மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” என்றார். அடுத்து, ஈசாய் அபினதாபை அழைத்து சாமுவேல் முன்பாகக் கடந்து போகச் செய்தார். அவர், “இவனையும் ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை” என்று கூறினார். பிறகு ஈசாய் சம்மாகுவைக் கடந்து போகச் செய்தார். “ஆண்டவர் இவனையும் தேர்ந்து கொள்ளவில்லை” என்றார் சாமுவேல். இவ்வாறு ஈசாய் தம் ஏழு புதல்வரைச் சாமுவேல் முன்பாகக் கடந்து போகச் செய்தார். “இவர்களையும் ஆண்டவர் தேர்ந்துகொள்ளவில்லை” என்றார் சாமுவேல்.
தொடர்ந்து சாமுவேல் ஈசாயைப் பார்த்து, “உன் பிள்ளைகள் இத்தனை பேர்தானா?” என்று கேட்க, “இன்னொரு சிறுவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான்” என்று பதிலளித்தார் ஈசாய். அதற்குச் சாமுவேல் அவரிடம், “ஆள் அனுப்பி அவனை அழைத்து வா; ஏனெனில் அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன்” என்றார். ஈசாய் ஆள் அனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றமுடன் இருந்தான். ஆண்டவர் சாமுவேலிடம், “தேர்ந்துகொள்ளப்பட்டவன் இவனே! எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்!” என்றார். உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து, அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப்பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது. சாமுவேல் இராமாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment