சனவரி 20 : முதல் வாசகம்
என் தந்தை சவுல் உன்னைக் கொல்லத் தேடுகிறார்.
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 18: 6-9; 19: 1-7
அந்நாள்களில்
தாவீது பெலிஸ்தியனைக் கொன்றபின், வீரர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, இஸ்ரயேலின் எல்லா நகர்களிலிருந்தும் பெண்கள் ஆடல் பாடலுடன் அரசர் சவுலைச் சந்திக்க வந்தனர்; அவர்கள் கஞ்சிராக்களோடும் நரம்பிசைக் கருவிகளுடனும் மகிழ்ச்சிப் பாடல் எழுப்பினர். அப்பெண்கள் அப்படி ஆடிப்பாடுகையில், “சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார்; தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றார்” என்று பாடினர். இந்த வார்த்தைகள் சவுலுக்கு அறவே பிடிக்கவில்லை; அவர் மிகவும் சினமுற்று, “அவர்கள் ‘தாவீதுக்குப் பதினாயிரம் பேர்’ என்றனர். எனக்கோ ‘ஆயிரம் பேர் மட்டுமே’ என்றனர். அவனுக்கு இன்னும் குறைவாக இருப்பது ஆட்சி ஒன்றுதான்!” என்று கூறினார். அன்று முதல் சவுல் தாவீதைப் பொறாமைக் கண்கொண்டு பார்க்கலானார்.
தாவீதைக் கொல்ல வேண்டுமென்று தம் மகன் யோனத்தானிடமும் தம் அலுவலர் எல்லாரிடமும் சவுல் தெரிவித்தார். ஆனால் சவுலின் மகன் யோனத்தான் தாவீதின்மீது மிகுதியான அன்பு கொண்டிருந்தார். ஆதலால் தாவீதைப் பார்த்து யோனத்தான், “என் தந்தை சவுல் உன்னைக் கொல்லத் தேடுகிறார்; ஆதலால் எச்சரிக்கையாய் இரு, காலையிலேயே புறப்பட்டு மறைவான ஓர் இடத்திற்குச் சென்று ஒளிந்து கொள். நீ வெளியில் இருக்கும் சமயத்தில் நான் என் தந்தையின் அருகில் இருந்து கொண்டு, உன்னைப் பற்றி அவரிடம் பேச்சுக் கொடுப்பேன்; அப்படி நான் அறிகிறதையெல்லாம் உனக்குத் தெரிவிப்பேன்” என்றார்.
யோனத்தான் தாவீதைப்பற்றித் தம் தந்தை சவுலிடம் நல்ல விதமாகப் பேசி, “அரசர் தம் அடியான் தாவீதின் பொருட்டுப் பாவம் செய்ய வேண்டாம்; ஏனெனில் அவன் உமக்குத் தீங்கு ஏதும் செய்ததில்லை; மேலும் அவனுடைய செயல்கள் உம் அரசில் மிகவும் பயனுடையனவாய் இருந்தன; அவன் தன் உயிரை ஒரு பொருட்டாய் எண்ணாது அப்பெலிஸ்தியனைக் கொன்றான்; அதனால் ஆண்டவர் இஸ்ரயேலர் எல்லாருக்கும் பெரும் வெற்றியை அளித்தார். நீர் அதைக் கண்டுமகிழ்ச்சியுற்றீர்;அப்படியிருக்க எக்காரணமும் இல்லாமல் தாவீதைக் கொல்வதன் மூலம் குற்றமற்ற இரத்தத்திற்கு எதிராக நீர் ஏன் பாவம் செய்ய வேண்டும்?” என்று கூறினார்.
சவுல் யோனத்தானின் வார்த்தைகளைக் கேட்டார்; அதனால் சவுல், “வாழும் ஆண்டவர்மேல் ஆணை! அவன் கொலை செய்யப்படமாட்டான்” என்றார்.
பின்பு யோனத்தான் தாவீதை அழைத்து இவ்வார்த்தைகளை எல்லாம் அவருக்குக் கூறினார்; மேலும் யோனத்தான் தாவீதைச் சவுலிடம் அழைத்துச் செல்ல, முன்பு போலவே தாவீது அவரது பணியில் ஈடுபட்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment