மார்ச் 22 : நற்செய்தி வாசகம்
இறந்தோரை தந்தை எழுப்பி, அவர்களை வாழவைப்பதுபோல மகனும் தாம் விரும்பியவர்களை வாழவைக்கிறார்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-30
அக்காலத்தில்
இயேசு யூதர்களிடம், “என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார்; நானும் செயலாற்றுகிறேன்” என்றார். இவ்வாறு அவர் ஓய்வுநாள் சட்டத்தை மீறியதோடு நில்லாமல், கடவுளைத் தம் சொந்தத் தந்தை என்று கூறித் தம்மையே கடவுளுக்கு இணையாக்கியதால் யூதர்கள் அவரைக் கொல்ல இன்னும் மிகுந்த முயற்சி செய்தார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: “மகன் தாமாக எதையும் செய்ய இயலாது; தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும். தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தந்தை மகன் மேல் அன்புகொண்டு தாம் செய்யும் அனைத்தையும் அவருக்குக் காட்டுகிறார்; இவற்றைவிடப் பெரிய செயல்களையும் அவருக்குக் காட்டுவார். நீங்களும் வியப்புறுவீர்கள்.
தந்தை இறந்தோரை எழுப்பி அவர்களை வாழ வைப்பதுபோல மகனும் தாம் விரும்பியவர்களை வாழ வைக்கிறார். தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பதுபோல மகனுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார். மகனை மதியாதவர் அவரை அனுப்பிய தந்தையையும் மதிப்பது இல்லை.
என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்; ஏற்கெனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது. அப்போது இறைமகனின் குரலை இறந்தோர் கேட்பர்; அதைக் கேட்போர் வாழ்வர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தந்தை, தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பதுபோல, மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார். அவர் மானிடமகனாய் இருப்பதால், தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தையும் தந்தை அவருக்கு அளித்துள்ளார்.
இதுபற்றி நீங்கள் வியப்புற வேண்டாம். காலம் வருகிறது; அப்போது கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது குரலைக் கேட்டு வெளியே வருவர். நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர்; தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர். நானாக எதுவும் செய்ய இயலாது. தந்தை சொற்படியே நான் தீர்ப்பிடுகிறேன். நான் அளிக்கும் தீர்ப்பு நீதியானது. ஏனெனில் என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment