ஆகஸ்ட் 16 : முதல் வாசகம்
மோசே மோவாபு நாட்டில் இறந்தார். அவரைப்போல், இறைவாக்கினர் வேறு எவரும் இஸ்ரயேலில் எழுந்ததில்லை.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 34: 1-12
அந்நாள்களில்
மோசே மோவாபுச் சமவெளியிலிருந்து எரிகோவுக்குக் கிழக்கே நெபோ மலையில் உள்ள பிஸ்காவின் உச்சிக்கு ஏறிச் சென்றார். ஆண்டவர் அவருக்குத் தாண் வரையில் உள்ள கிலயாது நாடு முழுவதையும் காட்டினார். மேலும் நப்தலி முழுவதையும் எப்ராயிம் நிலப்பகுதியையும், மனாசே நிலப்பகுதியையும் யூதாவின் நிலப்பகுதி முழுவதையும், மேற்கே மத்திய தரைக் கடல் வரையிலும் காட்டினார்; மற்றும் நெகேபையும் பேரீச்சை மாநகராகிய எரிகோ முதல் சோவார் வரையிலும் உள்ள நிலப் பரப்பையும் காட்டினார். அப்போது ஆண்டவர் மோசேக்கு உரைத்தது: ‘நான் உன் வழிமரபினருக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு ஆணையிட்டுக் கூறிய நிலம் இதுவே. உன் கண்களால் நீ அதைப் பார்க்கும்படி செய்துவிட்டேன். ஆனால் நீ அங்கு போகமாட்டாய்'.
எனவே, ஆண்டவர் கூறியபடியே, அவர்தம் ஊழியர் மோசே மோவாபு நாட்டில் இறந்தார். மோவாபு நாட்டில் பெத்பகோருக்கு எதிரே உள்ள பள்ளத்தாக்கில் அவர் அவரை அடக்கம் செய்தார். ஆனால் இன்றுவரை எந்த மனிதருக்கும் அவரது கல்லறை இருக்குமிடம் தெரியாது. மோசே இறக்கும்போது அவருக்கு வயது நூற்றிருபது. அவரது கண்கள் மங்கினதுமில்லை; அவரது வலிமை குறைந்ததுமில்லை. மோவாபுச் சமவெளியில் இஸ்ரயேல் மக்கள் மோசேக்காக முப்பது நாள்கள் துக்கம் கொண்டாடினர். மோசேக்காக இஸ்ரயேல் மக்கள் அழுது துக்கம் கொண்டாடின நாள்கள் நிறைவுற்றன.
நூனின் மகனாகிய யோசுவாவின் மேல் மோசே தம் கைகளை வைத்ததால், அவர் ஞானத்தின் ஆவியால் நிரப்பப் பெற்றிருந்தார். இஸ்ரயேல் மக்கள் யோசுவாவுக்குச் செவி கொடுத்து, மோசேக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடி நடந்தார்கள்.
ஆண்டவர் நேருக்குநேர் சந்தித்த மோசேயைப்போல், இறைவாக்கினர் வேறெவரும் இஸ்ரயேலில் இதுகாறும் எழுந்ததில்லை. ஏனெனில், எகிப்து நாட்டில் பார்வோனுக்கும், அவன் அலுவலருக்கும், அவன் நாடு முழுவதற்கும் அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் செய்யும்படி ஆண்டவர் மோசேயை அனுப்பினார். இஸ்ரயேலர் அனைவரின் கண்கள் காணுமாறு அவர் ஆற்றிய அனைத்து ஆற்றல்மிகு செயல்களும் அச்சுறுத்தும் மாபெரும் செயல்களுமே இதற்குச் சான்றாகும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment