செப்டம்பர் 13 : முதல் வாசகம்
நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உலகப் போக்கிலான உங்கள் இயல்புக்குரியவற்றை ஒழித்துவிடுங்கள்.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-11
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். இவ்வுலகு சார்ந்தவைபற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்து விட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும்பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.
ஆகவே உலகப் போக்கிலான உங்கள் இயல்புக்குரிய பரத்தைமை, ஒழுக்கக் கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலை வழிபாடான பேராசை ஆகியவற்றை ஒழித்துவிடுங்கள். இவையே கீழ்ப்படியா மக்கள்மீது கடவுளின் சினத்தை வரவழைக்கின்றன. இத்தகையவர்களோடு நீங்கள் வாழ்ந்தபோது நீங்களும் இவற்றில்தான் உழன்றீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் சினம், சீற்றம், தீமை ஆகிய அனைத்தையும் அகற்றிவிடுங்கள். பழிப்புரை, வெட்கக்கேடான பேச்சு ஆகிய எதுவும் உங்கள் வாயினின்று வரக்கூடாது. ஒருவரோடு ஒருவர் பொய் பேசாதீர்கள். ஏனெனில் நீங்கள் பழைய மனித இயல்பையும் அதற்குரிய செயல்களையும் களைந்துவிட்டு, புதிய மனித இயல்பை அணிந்திருக்கிறீர்கள். அவ்வியல்பு தன்னை உண்டாக்கினவரின் சாயலுக்கேற்பப் புதுப்பிக்கப்படுகிறது. இவ்வாறு நீங்கள் கடவுளை முழுமையாய் அறிய முடியும். புதுப்பிக்கப்பட்ட நிலையில் கிரேக்கர் என்றும், யூதர் என்றும், விருத்தசேதனம் பெற்றவர் என்றும், விருத்தசேதனம் பெறாதவர் என்றும், நாகரிகம் அற்றோர் என்றும், சீத்தியர் என்றும், அடிமை என்றும், உரிமைக் குடிமக்கள் என்றும் வேறுபாடு இல்லை. கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாய் இருப்பார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment