சனவரி 24 : முதல் வாசகம்
உன் வழித்தோன்றலை உனக்குப்பின் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன்.
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 4-17
அந்நாள்களில்
ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது: “நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: ‘நான் தங்குவதற்காக எனக்கு ஒரு கோவில் கட்டப் போகிறாயா?’ இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து நான் அழைத்துவந்தது முதல் இந்நாள்வரை நான் ஒரு நிலையான இல்லத்தில் தங்கவில்லை; மாறாக, ஒரு நடமாடும் கூடாரமே எனக்குத் தங்குமிடமாய் இருந்தது. இஸ்ரயேலர் அனைவரும் சென்ற இடமெல்லாம் நானும் உடன் சென்றேன். அப்பொழுது என் மக்கள் இஸ்ரயேலைப் பேணும்படி குலத் தலைவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன், அவர்களுள் எவரிடமாவது ‘எனக்காகக் கேதுரு மரங்களால் ஒரு கோவில் கட்டாதது ஏன்?’ என்று ஒரு வார்த்தை சொல்லியிருப்பேனா?
எனது ஊழியன் தாவீதிடம் படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். நீ சென்ற இடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்; உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்; மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர்போல் நீ புகழுறச் செய்வேன். எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன்; அவர்கள் அந்த இடத்திலேயே நிலைத்து வாழச் செய்வேன். என் மக்களாகிய இஸ்ரயேல்மீது நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்க காலத்தில் தீயவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டதுபோல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள்.
அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு ஓய்வு அளிப்பேன். மேலும், ஆண்டவர்தாமே உன் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார். உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும்போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன்.
எனது பெயருக்காக கோவில் கட்ட இருப்பவன் அவனே. அவனது அரசை நான் என்றும் நிலை நிறுத்துவேன். நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறு செய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன். உன் முன்பாக நான் சவுலை விலக்கியதுபோல், என் பேரன்பினின்று அவனை விலக்க மாட்டேன். என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!”
மேற்கூறிய வெளிப்பாட்டின் வார்த்தைகள் அனைத்தையும் நாத்தான் தாவீதுக்கு எடுத்துரைத்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment