சனவரி 27 : முதல் வாசகம்
நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தேன்.
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 12: 1-7a, 10b-17
அந்நாள்களில்
ஆண்டவர் நாத்தானைத் தாவீதிடம் அனுப்பினார். நாத்தான் அவரிடம் வந்து, பின்வருமாறு கூறினார்: “ஒரு நகரில் இரு மனிதர் இருந்தனர்; ஒருவன் செல்வன். மற்றவனோ ஏழை. செல்வனிடம் ஆடு, மாடுகள் ஏராளமாய் இருந்தன. ஏழையிடம் ஓர் ஆட்டுக்குட்டி தவிர வேறு ஒன்றுமே இல்லை. அவன் அதை விலைக்கு வாங்கியிருந்தான். அது அவனோடும் அவன் குழந்தைகளோடும் இருந்து வளர்ந்து பெரியதாகியது. அவனது உணவை உண்டு, அவனது கிண்ணத்திலிருந்து நீர் குடித்து, அவனது மடியில் உறங்கி, அவனுக்கு ஒரு மகளைப் போலவே அது இருந்தது. வழிப்போக்கன் ஒருவன் செல்வனிடம் வந்தான். தன்னிடம் வந்த வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்ய தன் ஆடுமாடுகளினின்று ஒன்றை எடுப்பதை விட்டு, அந்த ஏழையின் ஆட்டுக்குட்டியை எடுத்து வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்தான்.”
உடனே தாவீது அம்மனிதன் மேல் சீற்றம் கொண்டு “ஆண்டவர் மேல் ஆணை! இதைச் செய்தவன் கட்டாயம் சாகவேண்டும், இரக்கமின்றி அவன் இதைச் செய்ததால் அவன் ஓர் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு திருப்பித் தரவேண்டும்” என்று நாத்தானிடம் கூறினார்.
அப்போது நாத்தான் தாவீதிடம், “நீயே அம்மனிதன். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ என்னைப் புறக்கணித்து இத்தியன் உரியாவின் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய். இதோ! ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உன் குடும்பத்தினின்றே நான் உனக்குத் தீங்கை வரவழைப்பேன்; உன் கண்கள் காண, உன் மனைவியரை உனக்கு அடுத்திருப்பவனிடம் ஒப்புவிப்பேன். அவன் பட்டப்பகலில் உன் மனைவியரோடு படுத்திருப்பான். நீ மறைவில் செய்ததை, அனைத்து இஸ்ரயேலும் காணுமாறு நான் பட்டப்பகலில் நிகழச்செய்வேன்” என்று கூறினார்.
அப்போது தாவீது நாத்தானிடம், “நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன்” என்று சொன்னார். நாத்தான் தாவீதிடம், “ஆண்டவரும் உனது பாவத்தை நீக்கிவிட்டார். நீ சாகமாட்டாய். ஆயினும், ஆண்டவரின் எதிரிகள் அவரை இழிவாக எண்ணும்படி நீ இவ்வாறு செய்ததால் உனக்குப் பிறக்கும் மகன் உறுதியாகவே சாவான்” என்று சொன்னார்.
பின்பு நாத்தான் தம் வீட்டுக்குச் சென்றார். உரியாவின் மனைவி தாவீதிற்குப் பெற்றெடுத்த குழந்தையை ஆண்டவர் தாக்க, அது நோயுற்றுச் சாகக் கிடந்தது. தாவீது அக்குழந்தைக்காக ஆண்டவரிடம் மன்றாடினார். உண்ணா நோன்பு மேற்கொண்டு உள்ளே சென்று இரவெல்லாம் தரையில் படுத்துக் கிடந்தார். அவர்தம் வீட்டின் பெரியோர்கள் தரையினின்று அவரை எழுப்பச் சென்றனர்; அவருக்கோ விருப்பம் இல்லை. அவர்களோடு அவர் உண்ணவும் இல்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment