சனவரி 9 : முதல் வாசகம்
ஆண்டவர் அன்னாவை நினைவுகூர்ந்தார்; அவரும் சாமுவேலை ஈன்றெடுத்தார்.
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 9-20
அந்நாள்களில்
சீலோவில் உண்டு குடித்தபின், அன்னா எழுந்தார். குரு ஏலி, ஆண்டவரின் கோவில் முற்றத்தில் ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தார். அன்னா மனம் கசந்து அழுது புலம்பி, ஆண்டவரிடம் மன்றாடினார். அவர் பொருத்தனை செய்து வேண்டிக்கொண்டது: “படைகளின் ஆண்டவரே! நீர் உம் அடியாளாகிய என் துயரத்தைக் கண்ணோக்கி, என்னை மறவாமல் நினைவுகூர்ந்து எனக்கு ஓர் ஆண் குழந்தையைத் தருவீரானால், அவனை அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவராகிய உமக்கு ஒப்புக்கொடுப்பேன். அவனது தலைமேல் சவரக் கத்தியே படாது.”
அவர் இவ்வாறு ஆண்டவர் திருமுன் தொடர்ந்து மன்றாடிக் கொண்டிருந்தபோது, ஏலி அவருடைய வாயைக் கவனித்தார். அன்னா தம் உள்ளத்தினுள் பேசிக் கொண்டிருந்தார்: அவருடைய உதடுகள் மட்டும் அசைந்தன; குரல் கேட்கவில்லை. ஆகவே ஏலி அவரை ஒரு குடிகாரி என்று கருதினார். ஏலி அவரை நோக்கி, “எவ்வளவு காலம் நீ குடிகாரியாய் இருப்பாய்? மது அருந்துவதை நிறுத்து” என்றார்.
அதற்கு அன்னா மறுமொழியாக, “இல்லை என் தலைவரே! நான் உள்ளம் நொந்த ஒரு பெண். திராட்சை இரசத்தையோ வேறு எந்த மதுவையோ நான் அருந்தவில்லை. மாறாக, ஆண்டவர் திருமுன் என் உள்ளத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன். உம் அடியாளை ஒரு கீழ்த்தரப் பெண்ணாகக் கருத வேண்டாம். ஏனெனில், என் துன்ப துயரங்களின் மிகுதியால் நான் இதுவரை பேசிக் கொண்டிருந்தேன்” என்று கூறினார்.
பிறகு ஏலி, “மனநிறைவோடு செல். இஸ்ரயேலின் கடவுள் நீ அவரிடம் விண்ணப்பித்த உனது வேண்டுகோளைக் கேட்டருள்வார்” என்று பதிலளித்தார். அதற்கு அன்னா, “உம் அடியாள் உம் கண்முன்னே அருள் பெறுவாளாக!”என்று கூறித் தம் வழியே சென்று உணவு அருந்தினார். இதன்பின் அவர் முகம் வாடியிருக்கவில்லை.
அவர்கள் காலையில் எழுந்து ஆண்டவர் திருமுன் வழிபட்டுவிட்டுத் திரும்பிச்சென்று இராமாவில் இருந்த தங்கள் இல்லம் அடைந்தனர். எல்கானா தம் மனைவி அன்னாவோடு கூடி வாழ்ந்தார். ஆண்டவரும் அவரை நினைவுகூர்ந்தார். உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தார். “நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்” என்று சொல்லி, அவர் அவனுக்குச் ‘சாமுவேல்’என்று பெயரிட்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment