பிப்ரவரி 12 : முதல் வாசகம்
உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது, மனவுறுதி உண்டாகும். அப்போது நீங்கள் நிறைவுள்ளவர்களாய் இருப்பீர்கள்.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-11
சிதறுண்டு வாழும் பன்னிரு குலத்தினருக்கு, கடவுளுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் பணியாளனாகிய யாக்கோபு வாழ்த்துக் கூறி எழுதுவது:
என் சகோதரர் சகோதரிகளே, பல வகையான சோதனைகளுக்கு உள்ளாகும்போது நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டிருங்கள். உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது மனவுறுதி உண்டாகும் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் மனவுறுதி நிறைவான செயல்களால் விளங்கட்டும். அப்பொழுது எக்குறையுமின்றி முற்றும் நிறைவுள்ளவர்களாய் இருப்பீர்கள்.
உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்தில் கேட்கட்டும்; அப்பொழுது அவரும் ஞானத்தைக் கொடுப்பார். அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர். ஆனால் நம்பிக்கையோடு, ஐயப்பாடின்றிக் கேட்க வேண்டும். ஐயப்பாடு கொள்பவர்கள் காற்றினால் அலைக்கழிக்கப்படும் கடல் அலையைப் போன்றவர்கள். எனவே இத்தகைய இரு மனமுள்ள, நிலையற்ற போக்குடையவர்கள் ஆண்டவரிடம் ஏதாவது பெற முடியும் என நினைக்காதிருக்கட்டும்.
தாழ்நிலையில் உள்ள சகோதரர் சகோதரிகள் தாங்கள் உயர்வு பெறும்போது மகிழ்ச்சி அடைவார்களாக! செல்வச் செழிப்பில் இருப்பவர்கள் தாங்கள் தாழ்நிலை அடையும்போதும் மகிழ்ச்சியாய் இருப்பார்களாக! ஏனெனில் செல்வர்கள் புல்வெளிப் பூவைப் போல மறைந்தொழிவார்கள். கதிரவன் எழ, வெயில் ஏறிப் புல் உலர்ந்துபோம். அதன் பூ வதங்கி விழும்; அதன் அழகிய தோற்றமும் அழிந்துவிடும். அவ்வாறே செல்வரும் தம் அலுவல்களில் ஈடுபடும்போதே அழிவுறுவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment