ஏப்ரல் 15 : முதல் வாசகம்
ஸ்தேவானின் ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 8-15
அந்நாள்களில்
ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார். அப்பொழுது உரிமையடைந்தோர் எனப்படுவோரின் தொழுகைக் கூடத்தைச் சேர்ந்த சிலரும் சிரேன், அலக்சாந்திரியா நகரினரும் சிலிசியா, ஆசியா மாநிலத்தவரும் ஸ்தேவானோடு வாதாடத் தொடங்கினர். ஆனால் அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தை களையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை.
பின்பு அவர்கள், “இவன் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் சொன்னதை நாங்கள் கேட்டிருக்கிறோம்” என்று கூறச் சிலரைத் தூண்டிவிட்டனர். அவ்வாறே அவர்கள் மக்களையும் மூப்பர்களையும் மறைநூல் அறிஞர்களையும் அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்தார்கள். உடனே அவர்கள் எழுந்துவந்து அவரைப் பிடித்துத் தலைமைச் சங்கத்துக்கு இழுத்துச் சென்றார்கள்; மேலும் பொய்ச் சாட்சிகளைக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். அவர்கள், “இந்த மனிதன் இத்தூய இடத்தையும் திருச்சட்டத்தையும் எதிர்த்து ஓயாமல் பேசிவருகிறான்” என்று கூறினார்கள். மேலும் அவர்கள், “நசரேயராகிய இயேசு இந்த இடத்தை அழித்துவிடுவார் என்றும், மோசே நமக்குக் கொடுத்திருக்கிற முறைமைகளை மாற்றிவிடுவார் என்றும் இவன் கூறக் கேட்டோம்” என்றார்கள். தலைமைச் சங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரும் அவரை உற்றுப்பார்த்தபோது அவரது முகம் வானதூதரின் முகம்போல் இருக்கக் கண்டனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment