மே 10 : முதல் வாசகம்
இந்நகரத்தில் எனக்குரிய மக்கள் பலர் இருக்கின்றனர்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 9-18
பவுல் கொரிந்து நகரில் இருந்தபோது, இரவில் ஆண்டவர் பவுலுக்குக் காட்சியில் தோன்றி, “அஞ்சாதே; பேசிக்கொண்டேயிரு; நிறுத்தாதே. ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன். எவரும் உனக்குத் தீங்கிழைக்கப் போவதில்லை. இந்நகரத்தில் எனக்குரிய மக்கள் பலர் இருக்கின்றனர்” என்று சொன்னார். அவர் அவர்களுக்கு ஓர் ஆண்டு ஆறு மாதம் இறைவார்த்தையைக் கற்பித்து அங்கேயே தங்கியிருந்தார்.
கல்லியோ என்பவர் அக்காயா நாட்டின் ஆட்சியாளராக இருந்தபோது யூதர்கள் ஒருமித்து, பவுலைத் தாக்கி, அவரை நடுவர் மன்றத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்து, “இவன் திருச்சட்டத்துக்கு எதிரான முறையில் கடவுளை வழிபடுமாறு மக்களைத் தூண்டிவிடுகிறான்” என்றார்கள். பவுல் பேச வாயெடுத்தபோது கல்லியோ அவர்களை நோக்கி, “யூதர்களே, ஏதாவது குற்றமோ பழிபாவமோ இருக்குமாயின் நான் பொறுமையுடன் உங்கள் வழக்கைக் கேட்டிருப்பேன். ஆனால் இது சொற்களையும் பெயர்களையும் உங்கள் திருச்சட்டத்தையும் பற்றிய சிக்கலாய் இருப்பதால் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்; இதில் நடுவராயிருக்க நான் விரும்பவில்லை” என்று கூறி, அவர்களை நடுவர் மன்றத்திலிருந்து துரத்திவிட்டார்.
உடனே அவர்கள் அனைவரும் தொழுகைக்கூடத் தலைவரான சொஸ்தேனைப் பிடித்து நடுவர் மன்றத்துக்கு முன்பாக அடித்தனர். ஆனால் கல்லியோ எதையும் பொருட்படுத்தவில்லை.
பவுல் பல நாள்கள் கொரிந்துவிலுள்ள சகோதரர் சகோதரிகளிடம் தங்கியிருந்தார். அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு தம் நேர்த்திக்கடனை நிறைவேற்றக் கெங்கிரேயா நகரில் முடிவெட்டிக் கொண்டு, அக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகியோருடன் சிரியாவுக்குக் கப்பலேறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment