ஜூலை 10 : முதல் வாசகம்
ஆண்டவரைத் தேடும் காலம் நெருங்கி வந்துவிட்டது.
இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 10: 1-3, 7-8, 12
இஸ்ரயேல் தழைத்து வளர்ந்த திராட்சைக் கொடி, அது மிகுதியான கனிகளைத் தனக்கே தாங்கி நிற்கின்றது; எவ்வளவு மிகுதியாகக் கனிகளைக் கொடுத்ததோ, அவ்வளவு மிகுதியாய்ப் பலிபீடங்களை அமைத்தது; எத்தகைய சிறப்புடன் நாடு செழிப்புற்றதோ, அதற்கு இணையாய்ச் சிலைத் தூண்கள் சிறப்புப் பெற்றன. இருமனம் கொண்ட மக்களாகிய அவர்கள், தங்கள் குற்றத்திற்காகத் தண்டனை பெறுவார்கள்; ஆண்டவர் அவர்களுடைய பலிபீடங்களைத் தகர்த்திடுவார்; அவர்களுடைய சிலைத் தூண்களை நொறுக்கிடுவார். அப்போது அவர்கள், “நமக்கு அரசன் இல்லை; ஆண்டவருக்கு நாம் அஞ்சி நடக்கவில்லை; அரசன் இருந்தாலும், நமக்கு என்ன செய்வான்?” என்பார்கள்.
சமாரியாவின் அரசன் நீர்மேல் குமிழிபோல் அழிந்து போவான். இஸ்ரயேலின் பாவமாகிய சிலைவழிபாட்டின் உயர்ந்த இடமெல்லாம் அழிக்கப்படும்; முள்களும், முட்புதர்களும் அவற்றின் பலிபீடங்கள்மேல் வளரும்; அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து ‘எங்களை மூடிக்கொள்ளுங்கள்,’ குன்றுகளைப் பார்த்து ‘எங்கள்மேல் விழுங்கள்’ என்று சொல்வார்கள்.
நீதியை நீங்கள் விதைத்துக் கொள்ளுங்கள்; அன்பின் கனியை அறுவடை செய்யுங்கள்; உங்கள் தரிசு நிலத்தை உழுது பண்படுத்துங்கள்; ஏனெனில் ஆண்டவர் வந்து உங்கள்மேல் நேர்மையைப் பொழியுமாறு நீங்கள் அவரைத் தேடும் காலம் நெருங்கி வந்துவிட்டது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment