ஜூலை 15 : முதல் வாசகம்
உங்களைக் கழுவித் தூய்மைப்படுத்துங்கள்; உங்கள் தீச்செயலை என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 1: 11-17
“எண்ணற்ற உங்கள் பலிகள் எனக்கு எதற்கு?” என்கிறார் ஆண்டவர். “ஆட்டுக்கிடாய்களின் எரிபலிகளும், கொழுத்த விலங்குகளின் கொழுப்பும் எனக்குப் போதுமென்றாகிவிட்டன: காளைகள், ஆட்டுக் குட்டிகள், வெள்ளாட்டுக் கிடாய்கள் இவற்றின் இரத்தத்திலும் எனக்கு நாட்டமில்லை. நீங்கள் என்னை வழிபட என் திருமுன் வரும்போது, இவற்றை எல்லாம் கொண்டு வந்து என் கோவில் முற்றத்தை மிதிக்க வேண்டும் என்று கேட்டது யார்?
இனி, காணிக்கைகளை வீணாகக் கொண்டு வர வேண்டாம்; நீங்கள் காட்டும் தூபம் எனக்கு அருவருப்பையே தருகின்றது; நீங்கள் ஒழுங்கீனமாகக் கொண்டாடும் அமாவாசை, ஓய்வு நாள் வழிபாட்டுக் கூட்டங்களை நான் சகிக்க மாட்டேன். உங்கள் அமாவாசை, திருவிழாக் கூட்டங்களையும் என் உள்ளம் வெறுக்கின்றது; அவை என் மேல் விழுந்த சுமையாயின; அவற்றைச் சுமந்து சோர்ந்து போனேன். என்னை நோக்கி உங்கள் கைகளை நீங்கள் உயர்த்தும்போது, பாரா முகத்தினனாய் நான் இருப்பேன்; நீங்கள் தொடர்ந்து மன்றாடினாலும் நான் செவிகொடுப்பது இல்லை; உங்கள் கைகளோ இரத்தக் கறையால் நிறைந்திருக்கின்றன.
உங்களைக் கழுவித் தூய்மைப்படுத்துங்கள்; உங்கள் தீச்செயலை என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்; தீமை செய்தலை விட்டொழியுங்கள்; நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம்பெண்ணுக்காக வழக்காடுங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment