ஜூலை 5 : முதல் வாசகம்
உணவு கிடைக்காத பஞ்சமோ, நீரில்லாத வறட்சியோ அன்று; ஆண்டவரின் வாக்கு கிடைக்காத பஞ்சமே அது.
இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 8: 4-6, 9-12
வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்: ‘நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வு நாள் எப்பொழுது முடிவுறும்? மரக்காலைச் சிறியதாக்கி, எடைக் கல்லைக் கனமாக்கி, கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்; வெள்ளிக் காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்; கோதுமைப் பதர்களையும் விற்கலாம்’ என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா?
தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்: “அந்நாளில் நண்பகலில் கதிரவனை மறையச் செய்து பட்டப்பகலில் உலகை இருள் சூழச் செய்வேன். உங்கள் திருவிழாக்களை அழுகையாகவும், பாடல்களை எல்லாம் புலம்பலாகவும் மாற்றுவேன்; எல்லாரும் இடுப்பில் சாக்கு உடை உடுத்தவும், அனைவரின் தலையும் மழிக்கப்படவும் செய்வேன். ஒரே பிள்ளையைப் பறிகொடுத்தோர் புலம்புவது போல நீங்களும் புலம்புமாறு செய்வேன்; அதன் முடிவு கசப்பு மிக்க நாளாய் இருக்கும்."
தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்: “இதோ! நாள்கள் வரப் போகின்றன! அப்போது நாட்டினுள் பஞ்சத்தை அனுப்புவேன்; அது உணவு கிடைக்காத பஞ்சமோ, நீரில்லாத வறட்சியோ அன்று; ஆண்டவரின் வாக்கு கிடைக்காத பஞ்சமே அது. ஒரு கடல் முதல் மறு கடல் வரை, வடதிசை முதல் கீழ்த்திசை வரை தேடிச் சென்று அங்குமிங்கும் தள்ளாடி அலைந்து ஆண்டவரின் வாக்கைத் தேடுவார்கள். ஆனால், அதைக் கண்டடைய மாட்டார்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment