ஆகஸ்ட் 19 : முதல் வாசகம்
எசேக்கியேல் உங்களுக்கு ஓர் அடையாளமாய் இருப்பான்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 24: 15-24
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: “மானிடா! உன் கண்களுக்கு இன்பம் தருவதை உன்னிடமிருந்து ஒரே நொடியில் எடுத்துவிடப் போகிறேன். ஆனால் நீ புலம்பவோ, அழவோ, கண்ணீர் சிந்தவோ கூடாது. மெதுவாய்ப் பெருமூச்சு விடு! இறந்தோர்க்காய்ப் புலம்பாதே! உன் தலைப்பாகையைக் கட்டிக்கொள்! காலில் மிதியடியை அணிந்துகொள்! உன் வாயை மூடிக்கொள்ளாதே! இழவு கொண்டாடு வோரின் உணவை உண்ணாதே!"
நான் மக்களிடம் காலையில் உரையாடினேன். மாலையில் என் மனைவி இறந்துவிட்டாள். மறுநாள் காலையில் ஆண்டவர் கட்டளையிட்டதைச் செய்தேன். அப்போது மக்கள் என்னிடம், ‘நீர் செய்வதன் பொருள் என்னவென்று எங்களுக்குச் சொல்ல மாட்டீரோ?’ என்று கேட்டனர்.
எனவே, நான் அவர்களுக்குச் சொன்னது: ‘ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உங்கள் வலிமையின் பெருமையும், கண்களின் இன்பமும், இதயத்தின் விருப்பமுமாகிய என் தூயகத்தை நான் தீட்டுப்படுத்துவேன்; நீங்கள் விட்டுச் சென்ற ஆண் மக்களும் பெண் மக்களும் வாளால் மடிவர். நான் செய்ததுபோல் நீங்களும் செய்வீர்கள்; நீங்களும் உங்கள் வாயை மூடிக்கொள்ள மாட்டீர்கள்; இழவு கொண்டாடுவோரின் உணவை உண்ணவும் மாட்டீர்கள். தலைப்பாகையை உங்கள் தலையில் வைத்திருப்பீர்கள். கால்களில் மிதியடிகள் இருக்கும். நீங்கள் புலம்பவோ அழவோ மாட்டீர்கள். ஆனால் உங்கள் குற்றப்பழி குறித்துத் தளர்வுற்று உங்களிடையே புலம்பிக் கொள்வீர்கள். இவ்வாறு எசேக்கியேல் உங்களுக்கு ஓர் அடையாளமாய் இருப்பான். அவன் செய்ததுபோல் நீங்களும் செய்வீர்கள். இவை நடக்கையில் நானே தலைவராகிய ஆண்டவர் என அறிந்துகொள்வீர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment