செப்டம்பர் 14 : திருச்சிலுவையின் மகிமை விழா
முதல் வாசகம்
கொள்ளிவாய்ப் பாம்பைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்.
எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 21: 4-9
அந்நாள்களில்
ஏதோம் நாட்டைச் சுற்றிப் போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து இஸ்ரயேல் மக்கள் ‘செங்கடல் சாலை’ வழியாகப் பயணப்பட்டனர்; அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமை இழந்தனர். மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்: “இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது” என்றனர்.
உடனே ஆண்டவர் கொள்ளிவாய்ப் பாம்புகளை மக்களிடையே அனுப்பினார்; அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர். அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, “நாங்கள் பாவம் செய்துள்ளோம்; நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றிவிடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளும்” என்றனர்.
அவ்வாறே மோசே மக்களுக்காக மன்றாடினார். அப்போது ஆண்டவர் மோசேயிடம், “கொள்ளிவாய்ப் பாம்பு ஒன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார். அவ்வாறே மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment