அக்டோபர் 30 : முதல் வாசகம்
மனிதருக்காக அன்றிக் கடவுளுக்காகவே செய்வது போல நல்மனத்தோடு வேலை செய்யுங்கள்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 1-9
பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரின் அடியாருக்கு இதுவே ஏற்புடையது. “உன் தந்தையையும் தாயையும் மதித்து நட” என்பதே வாக்குறுதியை உள்ளடக்கிய முதலாவது கட்டளை. “இதனால் நீ நலம் பெறுவாய்; மண்ணுலகில் நீடூழி வாழ்வாய்” என்பதே அவ்வாக்குறுதி. தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். மாறாக அவர்களை ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்துத் திருத்தி, அறிவு புகட்டி வளர்த்து வாருங்கள்.
அடிமைகளே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவது போல் இவ்வுலகில் உங்களுக்குத் தலைவர்களாக இருப்பவர்களுக்கு அச்சத்தோடும் நடுக்கத்தோடும், முழு மனத்தோடும் கீழ்ப்படியுங்கள். மனிதர்களுக்கு உகந்தவர்களாகுமாறு, வேலை செய்வதாகக் காட்டிக் கொள்பவர்களாய் இராமல் கிறிஸ்துவின் பணியாளராய்க் கடவுளின் திருவுளத்தை உளமார நிறைவேற்றுங்கள். மனிதருக்காக அன்றிக் கடவுளுக்காகவே செய்வது போல நல்மனத்தோடு வேலை செய்யுங்கள். அடிமையாயினும் உரிமைக் குடிமகனாயினும், நன்மை செய்யும் ஒவ்வொருவரும் ஆண்டவரிடமிருந்து நன்மையே பெறுவர். இது உங்களுக்குத் தெரியும் அன்றோ!
தலைவர்களே, நீங்களும் உங்கள் அடிமைகளிடம் அவ்வாறே நடந்து கொள்ளுங்கள். அவர்களை அச்சுறுத்துவதை விட்டுவிடுங்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் ஒரே தலைவர் விண்ணுலகில் உண்டு என்பதையும் அவர் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment