ஆகஸ்ட் 12 : முதல் வாசகம்
வலிமை பெறு; துணிவு கொள்; ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்கு, இம்மக்களோடு நீ செல்லவேண்டும்.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 31: 1-8
மோசே பின்வரும் வார்த்தைகளை இஸ்ரயேலர் அனைவருக்கும் கூறினார்: அவர் சொன்னது: ``இன்று எனக்கு வயது நூற்று இருபது. இனி என்னால் நடமாட இயலாது. மேலும், `நீ யோர்தானைக் கடக்க மாட்டாய்' என்று ஆண்டவர் எனக்குக் கூறியுள்ளார். உன் கடவுளாகிய ஆண்டவரே உன் முன் செல்வார். அவரே உன் முன்னின்று இந்த வேற்றினங்களை அழிப்பார். நீ அவற்றுக்கு உரியவற்றை உடைமையாக்கிக் கொள்வாய்.
ஆண்டவர் சொன்னபடி, யோசுவா உனக்கு முன்பாகச் செல்வான். எமோரியரின் மன்னர்களான சீகோனுக்கும் ஓகுக்கும் அவர்களின் நாட்டுக்கும் செய்ததுபோல - அவர்களை அழித்ததுபோல - ஆண்டவர் அவற்றுக்கும் செய்வார். ஆண்டவர் அவர்களை உங்களிடம் ஒப்படைப்பார். நான் இன்று உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்துக் கட்டளைகளின்படி நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள். வலிமை பெறு; துணிவு கொள்; அஞ்சாதே, அவர்கள் முன் நடுங்காதே; ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவரே உனக்குமுன் செல்பவர்! அவர் உன்னை விட்டு விலக மாட்டார்; உன்னைக் கைவிடவும் மாட்டார்.''
பின்னர் மோசே யோசுவாவை வரவழைத்து, இஸ்ரயேலர் அனைவர் முன்னிலையிலும் அவரிடம் கூறியது: ``வலிமை பெறு; துணிவு கொள்; இவர்களுக்குக் கொடுப்பதாக அவர்களின் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள், இந்த மக்களோடு நீ செல்ல வேண்டும். அதை இவர்கள் உரிமையாக்கிக் கொள்ளுமாறு செய்ய வேண்டும். ஆண்டவரே உனக்கு முன் செல்வார். அவர் உன்னோடு இருப்பார். அவர் உன்னை விட்டு விலக மாட்டார். அவர் உன்னைக் கைவிடவும் மாட்டார். அஞ்சாதே, திகைக்காதே!''
ஆண்டவரின் அருள்வாக்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக