நவம்பர் 12 : முதல் வாசகம்
ஒனேசிமுவை அன்புமிக்க சகோதரனாக ஏற்றுக்கொள்ளும்.
திருத்தூதர் பவுல் பிலமோனுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 7-20
அன்பிற்குரியவரே,
உம் அன்பைக் குறித்து நான் பெருமகிழ்வும் ஆறுதலும் கொள்கிறேன். ஆம், சகோதரரே, உம்மால் இறைமக்களின் உள்ளம் புத்துயிர் பெற்றுள்ளது.
எனவே, நீர் செய்ய வேண்டியதை உமக்குக் கட்டளையிட, கிறிஸ்தவ உறவில், எனக்கு முழு உரிமை உண்டு என்றாலும், அன்பின் பெயரால் வேண்டுகோள் விடுக்கவே விரும்புகிறேன். கிறிஸ்து இயேசுவின் தூதுவனாக, அவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் பவுலாகிய எனக்குச் சிறையிலிருந்தபோது பிள்ளையான ஒனேசிமுக்காக உம்மிடம் வேண்டுகிறேன்.
முன்பு உமக்குப் பயனற்றவனாக இருந்த அவன், இப்பொழுது எனக்கும் உமக்கும் பயனுள்ளவன். அவனை உம்மிடம் திரும்ப அனுப்புகிறேன். அவனை அனுப்புவது என் இதயத்தையே அனுப்புவது போலாகும். நற்செய்தியின் பொருட்டுச் சிறையுற்றிருக்கும் எனக்கு, உமது பெயரால் பணியாற்ற, அவனை என்னிடமே நிறுத்திக்கொள்ள விரும்பினேன். ஆனால் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினால் செய்யாமல், மனமாரச் செய்யவேண்டும் என்று நினைத்தே, உம்முடைய உடன்பாடின்றி எதையும் செய்ய நான் விரும்பவில்லை.
அவன் என்றும் உம்மோடு இருக்க உம்மை விட்டுச் சிறிது காலம் பிரிந்திருந்தான் போலும்! இனி அவனை நீர் அடிமையாக அல்ல, அடிமையை விட மேலானவனாக, அதாவது உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக்கொள்ளும். அவன் என் தனிப்பட்ட அன்புக்கு உரியவன். அப்படியானால் மனிதன் என்னும் முறையிலும் ஆண்டவரைச் சார்ந்தவன் என்னும் முறையிலும் அவன் எத்துணை மேலாக உம் அன்புக்கு உரியவனாகிறான்! எனவே, நமக்குள்ள நட்புறவைக் கருதி, என்னை ஏற்றுக்கொள்வது போல் அவனையும் ஏற்றுக்கொள்ளும். அவன் உமக்கு ஏதாவது தீங்கு இழைத்திருந்தால் அல்லது கடன்பட்டிருந்தால் அது என் கணக்கில் இருக்கட்டும். ‘நானே அதற்கு ஈடு செய்வேன்’ எனப் பவுலாகிய நான் என் கைப்பட எழுதுகிறேன்.
நீர் உம்மையே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டும் என நான் உமக்குச் சொல்ல வேண்டியதில்லை. ஆம் சகோதரரே, ஆண்டவர் பொருட்டு எனக்கு இந்த உதவியைச் செய்யும். கிறிஸ்துவின் பெயரால் என் உள்ளம் புத்துயிர் பெறச் செய்யும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment