இரண்டாம் வாசகம்
இயேசு இறைமகன் என்று தூய ஆவியும் நீரும் சான்று பகர்கின்றன.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-9
அன்பார்ந்தவர்களே, இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர். நாம் கடவுள்மீது அன்புகொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள்மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும். ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை. ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்; உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே. இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்? நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் என தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை. எனவே சான்று அளிப்பவை மூன்று இருக்கின்றன. தூய ஆவியும் நீரும் இரத்தமுமே அவை. இம்மூன்றும் ஒரே நோக்கம் கொண்டவை. மனிதர் தரும் சான்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமே! கடவுள் தரும் சான்று அதைவிட மேலானது அன்றோ! கடவுள் தம் மகனுக்குச் சான்று பகர்ந்துள்ளார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
_____
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 1: 29
அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான்,``இதோ கடவுளின் செம்மறி! செம்மறியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்'' என்றார். அல்லேலூயா.
No comments:
Post a Comment