நவம்பர் 18 : முதல் வாசகம்
எங்கள் மூதாதையரின் உடன்படிக்கையின்படியே நடப்போம்.
மக்கபேயர் முதல் நூலிலிருந்து வாசகம் 2: 15-29
அந்நாள்களில்
கடவுளைப் புறக்கணிக்குமாறு யூதர்களைக் கட்டாயப்படுத்துவதற்காக மன்னன் ஏற்படுத்திய அலுவலர்கள், மக்களைப் பலிசெலுத்த வைக்கும்படி மோதயின் நகருக்குச் சென்றார்கள். இஸ்ரயேல் மக்களுள் பலர் அவர்களிடம் போய்ச் சேர்ந்தனர். மத்தத்தியாவும் அவருடைய மைந்தர்களும் தனியே கூடிவந்தார்கள்.
மன்னனின் அலுவலர்கள் மத்தத்தியாவை நோக்கி, “நீர் இந்த நகரத்தில் மதிப்பிற்குரிய பெருந்தலைவர். உம் மைந்தர்கள், சகோதரர்களுடைய ஆதரவு உமக்கு உண்டு. ஆதலால் இப்பொழுது நீர் முன்வாரும்; பிற இனத்தார், யூதேயா நாட்டு மக்கள், எருசலேமில் எஞ்சியிருப்போர் ஆகிய அனைவரும் செய்தவண்ணம் நீரும் மன்னரின் கட்டளையை நிறைவேற்றும். அப்படியானால் நீரும் உம் மைந்தர்களும் மன்னரின் நண்பர்கள் ஆவீர்கள்; பொன், வெள்ளிமற்றும் பல்வேறு பரிசுகளால் சிறப்பிக்கப் பெறுவீர்கள்” என்று கூறினார்கள்.
அதற்கு மறுமொழியாக மத்தத்தியா உரத்த குரலில், “மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட எல்லா மக்களினத்தாரும் அவருக்குக் கீழ்ப்படிந்து, தங்கள் மூதாதையரின் வழிபாட்டு முறைகளைக் கைவிட்டு, அவருடைய கட்டளைகளை நிறைவேற்ற இசைந்தாலும், நானும் என் மைந்தர்களும் சகோதரர்களும் எங்கள் மூதாதையரின் உடன்படிக்கையின்படியே நடப்போம். திருச்சட்டத்தையும் அதன் விதிமுறைகளையும் நாங்கள் கைவிட்டுவிடுவதைக் கடவுள் தடுத்தருள்வாராக! மன்னரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மாட்டோம்; எங்கள் வழிபாட்டு முறைகளினின்று சிறிதும் பிறழ மாட்டோம்” என்று கூறினார்.
மத்தத்தியா இச்சொற்களைக் கூறி முடித்ததும், மன்னரின் கட்டளைப்படி மோதயின் நகரத்துப் பீடத்தின் மேல் பலியிட யூதன் ஒருவன் எல்லாருக்கும் முன்பாக வந்தான். மத்தத்தியா அதைப் பார்த்ததும் திருச்சட்டத்தின்பால் கொண்ட பேரார்வத்தால் உள்ளம் கொதித்தெழுந்தார்; முறையாகச் சினத்தை வெளிக்காட்டி அவன்மீது பாய்ந்து பலிபீடத்தின்மீதே அவனைக் கொன்றார். அதே நேரத்தில், பலியிடும்படி மக்களை வற்புறுத்திய மன்னனின் அலுவலனைக் கொன்று பலிபீடத்தையும் இடித்துத் தள்ளினார். இவ்வாறு சாலூவின் மகன் சிம்ரிக்குப் பினகாசு செய்ததுபோல், திருச்சட்டத்தின்பால் தாம் கொண்டிருந்த பேரார்வத்தை மத்தத்தியா வெளிப்படுத்தினார்.
பின்னர் மத்தத்தியா நகரெங்கும் சென்று, “திருச்சட்டத்தின்பால் பேரார்வமும் உடன்படிக்கை மீது பற்றுறுதியும் கொண்ட எல்லாரும் என் பின்னால் வரட்டும்” என்று உரத்த குரலில் கத்தினார். அவரும் அவருடைய மைந்தர்களும் நகரில் இருந்த தங்கள் உடைமைகளையெல்லாம் விட்டுவிட்டு மலைகளுக்குத் தப்பியோடினார்கள்.
அப்போது நீதி நேர்மையைத் தேடிய பலர் பாலைநிலத்தில் தங்கி வாழச் சென்றனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment