நவம்பர் 5 : முதல் வாசகம்
கடவுளின் நற்செய்தியை அறிவிப்பதே என் குருத்துவப் பணி.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 15: 14-21.
என் சகோதரர் சகோதரிகளே, நீங்கள் நன்னயம் நிறைந்தவர்களாயும், எல்லா அறிவும் நிரம்பப் பெற்றவர்களாயும், ஒருவர் மற்றவரை அறிவுறுத்தக் கூடியவர்களாயும் இருக்கிறீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். ஆயினும் உங்களுக்கு நினைவூட்டும் வகையில் சிலவற்றை இக்கடிதத்தில் மிகத் துணிவோடு எழுதியுள்ளேன். நான் கடவுளின் அருளைப் பெற்றவன் என்பதால்தான் அவ்வாறு எழுதினேன். அந்த அருள்தான் என்னைப் பிற இனத்தாருக்குப் பணி செய்யக் கிறிஸ்து இயேசுவின் ஊழியனாக்கிற்று. பிற இனத்தார் தூய ஆவியால் அர்ப்பணிக்கப்பட்ட, கடவுளுக்கு உகந்த காணிக்கையாகும்படி அவர்களுக்குக் கடவுளின் நற்செய்தியை அறிவிப்பதே என் குருத்துவப் பணி.
ஆகையால், கடவுளுக்காகச் செய்யும் இந்தப் பணியை முன்னிட்டு, கிறிஸ்து இயேசுவுக்குரியவனாகிய நான் பெருமை பாராட்டிக்கொள்ள இடமுண்டு. பிற இனத்தார் தமக்குக் கீழ்ப்படியும் பொருட்டுக் கிறிஸ்து என் வழியாய்ச் சொல்லாலும் செயலாலும், அரும் அடையாளங்கள், அருஞ் செயல்களின் வல்லமையாலும், கடவுளின் ஆவியின் வல்லமையாலும் செய்து முடித்தவற்றைத் தவிர வேறெதைப் பற்றியும் பேச நான் துணியமாட்டேன். இவ்வாறு, எருசலேம் தொடங்கி இல்லிரிக்கம் மாநிலம் வரை எங்கும் சுற்றிக் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் பணியை முடித்துவிட்டேன்.
கிறிஸ்துவின் பெயரைக் கேள்விப்படாத இடங்களில் மட்டும் நற்செய்தி அறிவிப்பதே என் நோக்கமாய் இருந்தது. ஏனெனில் வேறொருவர் இட்ட அடித்தளத்தின்மேல் கட்டி எழுப்ப நான் விரும்பவில்லை. ஆனால், “தங்களுக்குச் சொல்லப்படாததை அவர்கள் காண்பர்; தாங்கள் கேள்விப் படாததை அவர்கள் புரிந்துகொள்வர்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment