நவம்பர் 8 : முதல் வாசகம்
ஆண்டவரின் ஆவி உலகை நிரப்பியுள்ளது.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 1: 1-7
மண்ணுலகை ஆள்பவர்களே, நீதியின்மேல் அன்பு செலுத்துங்கள்; நன்மனத்துடன் ஆண்டவரைப் பற்றி நினைந்திடுங்கள்; நேர்மையான உள்ளத்துடன் அவரைத் தேடுங்கள். அவரைச் சோதியாதோர் அவரைக் கண்டடைகின்றனர்; அவரை நம்பினோர்க்கு அவர் தம்மை வெளிப்படுத்துகின்றார்.
நெறிகெட்ட எண்ணம் மனிதரைக் கடவுளிடமிருந்து பிரித்துவிடும். அவரது ஆற்றல் சோதிக்கப்படும்பொழுது, அது அறிவிலிகளை அடையாளம் காட்டிவிடும். வஞ்சனை நிறைந்த ஆன்மாவில் ஞானம் நுழைவதில்லை; பாவத்திற்கு அடிமையான உடலில் ஞானம் குடிகொள்வதில்லை. நற்பயிற்சி பெற்ற உள்ளம் வஞ்சனையினின்று விலகியோடும்; அறிவற்ற எண்ணங்களை விட்டு அகலும்; அநீதி அணுகுகையில் அது நாணி ஒதுங்கும்.
ஞானம் மனிதநேயமுள்ள ஆவி; ஆயினும் இறைவனைப் பழிப்போரை அது தண்டியாமல் விடாது. கடவுள் அவர்களுடைய உள்ளுணர்வுகளின் சாட்சி; உள்ளத்தை உள்ளவாறு உற்று நோக்குபவர்; நாவின் சொற்களைக் கேட்பவரும் அவரே. ஆண்டவரின் ஆவி உலகை நிரப்பியுள்ளது; அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அந்த ஆவி ஒவ்வொரு சொல்லையும் அறிகின்றது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment