சனவரி 23 : இரண்டாம் வாசகம்
நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 12-30
சகோதரர் சகோதரிகளே,
உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாய் இருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம்.
உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல; பல உறுப்புகளால் ஆனது. ‘‘நான் கை அல்ல; ஆகவே இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல” எனக் கால் சொல்லுமானால், அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா? ‘‘நான் கண் அல்ல; ஆகவே இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல” எனக் காது சொல்லுமானால், அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா? முழு உடலும் கண்ணாயிருந்தால் கேட்பது எப்படி? முழு உடலும் காதாயிருந்தால் முகர்வது எப்படி?
உண்மையில் கடவுள் ஒவ்வோர் உறுப்பையும் தாம் விரும்பியவாறே உடலில் அமைத்தார். அவை யாவும் ஒரே உறுப்பாய் இருந்தால் உடல் என ஒன்று இருக்குமா? எனவேதான் பல உறுப்புகளை உடையதாய் இருந்தாலும் உடல் ஒன்றே. கண் கையைப் பார்த்து, ‘நீ எனக்குத் தேவையில்லை’ என்றோ தலை கால்களைப் பார்த்து, ‘நீங்கள் எனக்குத் தேவையில்லை’ என்றோ சொல்ல முடியாது.
மாறாக, உடலில் மிக வலுவற்றனவாய்த் தோன்றும் உறுப்புகளே மிகவும் தேவையானவையாய் இருக்கின்றன. உடலின் மதிப்புக் குறைவான உறுப்புகள் என நமக்குத் தோன்றுபவற்றிற்கே நாம் மிகுந்த மதிப்புக் கொடுக்கிறோம். நம் மறைவான உறுப்புகளே மிகுந்த மதிப்புப் பெறுகின்றன. மறைந்திராத நம் உறுப்புகளுக்கு அது தேவையில்லை. மாறாக, மதிப்புக் குறைந்த உறுப்புகளுக்கு மிகுந்த மதிப்புக் கொடுத்தே கடவுள் உடலை ஒன்றித்து உருவாக்கினார். உடலில் பிளவு ஏற்படாமல், ஒவ்வோர் உறுப்பும் மற்ற உறுப்புகளின் மீது ஒரேவிதக் கவலை கொள்ளவேண்டும் என்றே இப்படிச் செய்தார். ஓர் உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன்புறும். ஓர் உறுப்பு பெருமை பெற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து மகிழ்ச்சியுறும்.
நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள். அவ்வாறே திருச்சபையிலும் கடவுள் முதலாவது திருத்தூதர்களையும், இரண்டாவது இறைவாக்கினர்களையும், மூன்றாவது போதகர்களையும், பின்னர் வல்லசெயல் செய்வோர்களையும், அதன்பின் பிணிதீர்க்கும் அருள்கொடை பெற்றவர்கள், துணை நிற்பவர்கள், தலைமையேற்று நடத்துபவர்கள், பல்வகை பரவசப் பேச்சுப் பேசுகிறவர்கள் ஆகியோரையும் ஏற்படுத்தினார். எல்லாருமே திருத்தூதர்களா? எல்லாருமே இறைவாக்கினர்களா? எல்லாருமே போதகர்களா? எல்லாருமே வல்லசெயல் செய்பவர்களா? இல்லை. எல்லாருமே பிணி தீர்க்கும் அருள்கொடையைப் பெற்றவர்களா? எல்லாருமே பரவசப் பேச்சுப் பேசுகிறவர்களா? எல்லாருமே விளக்கம் அளிப்பவர்களா? இல்லையே!
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 4: 18-19 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா!
ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என அறிவிக்கவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.
No comments:
Post a Comment