சனவரி 31 : முதல் வாசகம்
தப்பி ஓடுவோம்; இல்லையேல் அப்சலோமிடமிருந்து தப்ப முடியாது.
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 15: 13-14, 30; 16: 5-13a
அந்நாள்களில்
தூதன் ஒருவன் தாவீதிடம் வந்து, “அப்சலோம் இஸ்ரயேலரின் உள்ளங்களைக் கவர்ந்து கொண்டார்” என்று கூறினான். தாவீது தம்மோடு எருசலேமிலிருந்த அலுவலர் அனைவரிடமும், “வாருங்கள், நாம் தப்பியோடுவோம்; ஏனெனில் அப்சலோமிற்கு முன்பாக நாம் தப்ப முடியாது. விரைவில் வெளியேறுங்கள், இல்லையேல் அவன் விரைவில் நம்மை மேற்கொண்டு, நமக்குத் தீங்கு விளைவிப்பான்; நகரையும் வாள்முனையால் தாக்குவான்” என்றார்.
தாவீது அழுதுகொண்டே ஒலிவ மலை ஏறிச் சென்றார். தலையை மூடிக்கொண்டு வெறுங்காலோடு அவர் நடந்தார். அவரோடு இருந்த மக்கள் அனைவரும் தம் தலையை மூடிக்கொண்டு அழுதுகொண்டே ஏறிச்சென்றனர்.
தாவீது பகூரிம் வந்தபோது, சவுலின் குடும்பத்தையும் வீட்டையும் சார்ந்த ஒருவன் அவரை எதிர்கொண்டான். அவன் கேராவின் மகனான சிமயி. அவன் பழித்துக் கொண்டே எதிரே வந்தான் . அவன் தாவீது மீதும், தாவீது அரசரின் எல்லாப் பணியாளர் மீதும், எல்லா மக்கள் மீதும், அவர்தம் வலமும் இடமும் இருந்த வீரர்கள் மீதும் கல்லெறிந்தான்.
சிமயி பழித்துக் கூறியது: “இரத்த வெறியனே! பரத்தை மகனே! போ! போ! நீ சிந்திய சவுல் வீட்டாரின் இரத்தப் பழி அனைத்தையும் ஆண்டவர் உன்மீது வரச்செய்துள்ளார். சவுலுக்குப் பதிலாக நீ ஆட்சி செய்தாய் அன்றோ! ஆண்டவர் உன் மகன் அப்சலோமின் கையில் அரசைத் தருவார்! இரத்த வெறியனான நீ உன் தீமையிலேயே அழிவாய்.”
அப்போது செரூயாவின் மகன் அபிசாய் அரசரிடம் வந்து, “இச்செத்த நாய் என் தலைவராம் அரசரைப் பழிப்பதா? இதோ நான் சென்று அவனது தலையைக் கொய்து எறிய எனக்கு அனுமதி தாரும்” என்றான்.
அதற்கு அரசர், “செரூயாவின் மக்களே! இதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். அவன் பழிக்கட்டும்! ஒருவேளை ‘தாவீதைப் பழி!’ என்று ஆண்டவரே அவனுக்குச் சொல்லியிருந்தால், ‘இவ்வாறு நீ ஏன் செய்தாய்?’ என்று யார் சொல்ல முடியும்” என்றார். மீண்டும் தாவீது அபிசாயிடமும் தம் பணியாளர் அனைவரிடமும் கூறியது: “இதோ! எனக்குப் பிறந்த என் மகனே என் உயிரைப் பறிக்கத் தேடுகிறான். பென்யமின் குலத்தைச் சார்ந்த இவன் செய்யலாகாதோ? அவனை விட்டுவிடு! அவன் பழிக்கட்டும்! ஏனெனில் ஆண்டவரே அவனைத் தூண்டியுள்ளார். ஒருவேளை ஆண்டவர் என் துயரத்தைக் காண்பார். இன்று அவன் பழித்துப் பேசியதற்காக எனக்கு அவர் நன்மை செய்வார்.” தாவீது தன் ஆள்களோடு பயணத்தைத் தொடர்ந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment