பிப்ரவரி 3 : முதல் வாசகம்
உலகப் போக்குப்படி நானும் சாகப்போகிறேன். சாலமோனே! நீ நெஞ்சுறுதியுடன் இரு.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 2: 1-4, 10-12
தாவீதின் இறுதி நாள் நெருங்கினபோது அவர் தம் மகன் சாலமோனுக்குப் பணித்துக் கூறியது இதுவே: “அனைத்துலகும் போகும் வழியே நானும் போகிறேன். நீ நெஞ்சுறுதியும் வீரமும் கொண்டவனாய் இரு. உன் கடவுளாகிய ஆண்டவரின் ஆணைகளைக் கடைப்பிடி. அவர் காட்டும் வழியில் நட. மோசேயின் சட்டநூலில் எழுதப்பட்டுள்ள கடவுளுடைய நியமங்கள், விதிமுறைகள், நீதிச் சட்டங்கள், ஒழுங்குமுறைகள் ஆகியவற்றைக் கடைப்பிடி. இப்படிச் செய்தால், நீ செய்யும் காரியங்களிலும் செல்லும் இடங்களிலும் வெற்றி காண்பாய். ஏனெனில் ஆண்டவர் என்னை நோக்கி, ‘உன் மைந்தர்கள் தங்கள் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் என் முன்னிலையில் உண்மையுடன் நடப்பார்களானால், இஸ்ரயேலின் அரியணையில் அமர்வதற்கேற்ற ஒருவன் அவர்களுள் இல்லாமல் போவதில்லை’ என்று எனக்குக் கொடுத்த வாக்கு அப்போதுதான் நிலைத்திருக்கும்.”
பின்னர் தாவீது தம் மூதாதையருடன் துயில் கொண்டு, தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டார். தாவீது இஸ்ரயேலின்மீது ஆட்சி செலுத்திய காலம் நாற்பது ஆண்டுகள். அவர் எபிரோனில் ஏழு ஆண்டுகளும் எருசலேமில் முப்பத்து மூன்று ஆண்டுகளும் ஆட்சி செலுத்தினார். சாலமோன் தம் தந்தை தாவீதின் அரியணையில் அமர்ந்தார். அவருடைய ஆட்சி உறுதியாக நிலைநாட்டப்பட்டது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment