மார்ச் 19 : முதல் வாசகம்
இஸ்ரயேல் மீது அரசனாக தாவீது திருப்பொழிவு செய்யப்பட்டான்.
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 16: 1b, 6-7, 10-13a
அந்நாள்களில்
ஆண்டவர் சாமுவேலை நோக்கி, ‘‘உன்னிடமுள்ள கொம்பை எண்ணெயால் நிரப்பிக் கொண்டுபோ. பெத்லகேமைச் சார்ந்த ஈசாயிடம் உன்னை அனுப்புகிறேன்; ஏனெனில் அவன் புதல்வருள் ஒருவனை அரசனாகத் தேர்ந்துள்ளேன்” என்றார்.
ஈசாயின் புதல்வர்கள் வந்தபோது, அவர் எலியாவைப் பார்த்தவுடனே, ‘‘ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும்” என்று எண்ணினார். ஆனால் ஆண்டவர் சாமுவேலிடம், ‘‘அவன் தோற்றத்தையும் உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில் நான் அவனைப் புறக்கணித்துவிட்டேன். மனிதர் பார்ப்பதுபோல் நான் பார்ப்பதில்லை; மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” என்றார்.
இவ்வாறு ஈசாய் தம் ஏழு புதல்வரைச் சாமுவேல் முன்பாகக் கடந்து போகச் செய்தார். ‘‘இவர்களையும் ஆண்டவர் தேர்ந்துகொள்ளவில்லை” என்றார் சாமுவேல். தொடர்ந்து சாமுவேல் ஈசாயைப் பார்த்து, ‘‘உன் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா?” என்று கேட்க, ‘‘இன்னொரு சிறுவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான்” என்று பதிலளித்தார் ஈசாய். அதற்குச் சாமுவேல் அவரிடம், ‘‘ஆள் அனுப்பி அவனை அழைத்து வா; ஏனெனில் அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன்” என்றார். ஈசாய் ஆள் அனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றமுடன் இருந்தான். ஆண்டவர் சாமுவேலிடம், ‘‘தேர்ந்து கொள்ளப்பட்டவன் இவனே! எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்!” என்றார்.
உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப்பொழிவு செய்தார். அன்றுமுதல் ஆண்டவரின் ஆவி தாவீதின்மேல் நிறைவாக இருந்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment