மார்ச் 24 : முதல் வாசகம்
இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 1a, 12-22
இறைப்பற்றில்லாதவர்கள் தவறாகக் கணித்து உள்ளத்தில் பின்வருமாறு சொல்லிக்கொண்டார்கள்: ‘நீதிமான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்; ஏனெனில் அவர்கள் நமக்குத் தொல்லையாய் இருக்கிறார்கள்; நம் செயல்களை எதிர்க்கிறார்கள்; திருச்சட்டத்திற்கு எதிரான பாவங்களுக்காக நம்மைக் கண்டிக்கிறார்கள்; நற்பயிற்சியை மீறிய குற்றங்களை நம்மீது சுமத்துகிறார்கள். கடவுளைப் பற்றிய அறிவு தங்களுக்கு உண்டு என அவர்கள் பறைசாற்றுகிறார்கள்; ஆண்டவரின் பிள்ளைகள் எனத் தங்களை அழைத்துக்கொள்கிறார்கள்.
அவர்களது நடத்தையே நம் எண்ணங்களைக் கண்டிக்கிறது; அவர்களைப் பார்ப்பதே நமக்குத் துயரமாய் உள்ளது. அவர்களது வாழ்க்கை மற்றவர் வாழ்க்கையினின்று வேறுபட்டது; அவர்களுடைய வழிமுறைகள் மாறுபட்டவை. இழிந்தோர் என நம்மை அவர்கள் எண்ணுகிறார்கள்; தூய்மையற்ற பொருளினின்று ஒதுங்கிச் செல்வதுபோல நம்முடைய வழிகளினின்று விலகிச் செல்கிறார்கள்; நீதிமான்களின் முடிவு மகிழ்ச்சிக்குரியது எனக் கருதுகிறார்கள்; கடவுள் தம் தந்தை எனப் பெருமை பாராட்டுகிறார்கள்.
அவர்களுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம்; முடிவில் அவர்களுக்கு என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம். நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால், அவர் அவர்களுக்கு உதவி செய்வார்; பகைவரிடமிருந்து அவர்களை விடுவிப்பார். அவர்களது கனிவினைக் கண்டுகொள்ளவும், பொறுமையை ஆய்ந்தறியவும், வசைமொழி கூறியும் துன்புறுத்தியும் அவர்களைச் சோதித்தறிவோம். இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்; ஏனெனில் தங்கள் வாய்மொழிப்படி அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள்.’
இறைப்பற்று இல்லாதவர்கள் இவ்வாறு எண்ணி நெறி தவறிச் சென்றார்கள். அவர்களின் தீயொழுக்கமே அவர்களைப் பார்வையற்றோர் ஆக்கிவிட்டது. அவர்கள் கடவுளின் மறைவான திட்டங்களை அறிய வில்லை; தூய வாழ்வுக்குக் கைம்மாறு உண்டு என்று நம்பவில்லை; மாசற்றவர்களுக்குப் பரிசு கிடைக்கும் என்று உய்த்துணரவில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment