Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, March 25, 2023

மார்ச் 26 : நற்செய்தி வாசகம்உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 1-45

மார்ச் 26 : நற்செய்தி வாசகம்

உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 1-45
அக்காலத்தில்

பெத்தானியாவில் வாழ்ந்துவந்த இலாசர் என்னும் ஒருவர் நோயுற்றிருந்தார். அவ்வூரில்தான் மரியாவும் அவருடைய சகோதரியான மார்த்தாவும் வாழ்ந்து வந்தனர். இந்த மரியாதான் ஆண்டவர்மேல் நறுமணத் தைலம் பூசித் தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர். நோயுற்றிருந்த இலாசர் இவருடைய சகோதரர். இலாசரின் சகோதரிகள் இயேசுவிடம் ஆள் அனுப்பி, “ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான்” என்று தெரிவித்தார்கள். அவர் இதைக் கேட்டு, “இந்நோய் சாவில் போய் முடியாது. கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார்” என்றார்.

மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார். இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்ட பிறகு, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார். பின்னர் தம் சீடரிடம், “மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்” என்று கூறினார். அவருடைய சீடர்கள் அவரிடம், “ரபி, இப்போதுதானே யூதர்கள் உம் மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா?” என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, “பகலுக்குப் பன்னிரண்டு மணி நேரம் உண்டு அல்லவா? பகலில் நடப்பவர் இடறி விழுவதில்லை; ஏனெனில் பகல் ஒளியில் பார்க்க முடிகிறது. ஆனால் இரவில் நடப்பவர் இடறி விழுவார்; ஏனெனில் அப்போது ஒளி இல்லை” என்றார்.

இவ்வாறு கூறியபின், “நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்” என்றார். அவருடைய சீடர் அவரிடம், “ஆண்டவரே, அவர் தூங்கினால் நலமடைவார்” என்றனர். இயேசு அவருடைய சாவைக் குறிப்பிட்டே இவ்வாறு சொன்னார். வெறும் தூக்கத்தையே அவர் குறிப்பிட்டதாக அவர்கள் நினைத்தார்கள். அப்போது இயேசு அவர்களிடம், “இலாசர் இறந்துவிட்டான்” என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டு, “நான் அங்கு இல்லாமல் போனதுபற்றி உங்கள் பொருட்டு மகிழ்கிறேன்; ஏனெனில் நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது. அவனிடம் போவோம், வாருங்கள்” என்றார். திதிம் என்னும் தோமா தம் உடன்சீடரிடம், “நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்” என்றார்.
இயேசு அங்கு வந்தபோது இலாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது. பெத்தானியா எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர் தொலையில் இருந்தது. சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர். இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார். மார்த்தா இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும்” என்றார். இயேசு அவரிடம், “உன் சகோதரன் உயிர்த்தெழுவான்” என்றார். மார்த்தா அவரிடம், “இறுதி நாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்குத் தெரியும்” என்றார். இயேசு அவரிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார். மார்த்தா அவரிடம், “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” என்றார்.

இவ்வாறு சொன்னபின் மார்த்தா தம் சகோதரியான மரியாவைக் கூப்பிடச் சென்றார்; அவரிடம், “போதகர் வந்துவிட்டார்; உன்னை அழைக்கிறார்” என்று காதோடு காதாய்ச் சொன்னார். இதைக் கேட்டதும் மரியா விரைந்தெழுந்து இயேசுவிடம் சென்றார். இயேசு அதுவரையிலும் ஊருக்குள் வரவில்லை. மார்த்தா தம்மைச் சந்தித்த இடத்திலேயே இன்னும் இருந்தார். வீட்டில் மரியாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள் அவர் விரைந்தெழுந்து வெளியே செல்வதைக் கண்டு, அவர் அழுவதற்காகக் கல்லறைக்குப் போகிறார் என்று எண்ணி அவர் பின்னே சென்றார்கள்.

இயேசு இருந்த இடத்திற்கு மரியா வந்து, அவரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என்றார். மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி, “அவனை எங்கே வைத்தீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் அவரிடம், “ஆண்டவரே, வந்து பாரும்” என்றார்கள். அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார். அதைக் கண்ட யூதர்கள், “பாருங்கள், இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு!” என்று பேசிக்கொண்டார்கள். ஆனால் அவர்களுள் சிலர், “பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இவர் இவரைச் சாகாமலிருக்கச் செய்ய இயலவில்லையா?” என்று கேட்டனர்.

இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது. “கல்லை அகற்றிவிடுங்கள்” என்றார் இயேசு. இறந்துபோனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம், “ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!” என்றார். இயேசு அவரிடம், “நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா?” என்று கேட்டார். அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, “தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும்பொருட்டே இப்படிச் சொன்னேன்” என்று கூறினார். இவ்வாறு சொன்னபின் இயேசு உரத்த குரலில், “இலாசரே, வெளியே வா” என்று கூப்பிட்டார். இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. “கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்” என்று இயேசு அவர்களிடம் கூறினார்.

மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

No comments:

Post a Comment