ஏப்ரல் 29 : முதல் வாசகம்
திருச்சபை வளர்ச்சியுற்று தூய ஆவியாரின் துணையால் பெருகிவந்தது.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 9: 31-42
அந்நாள்களில்
யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய பகுதிகளில் எல்லாம் திருச்சபை வளர்ச்சியுற்று, ஆண்டவருக்கு அஞ்சி நடந்து, அமைதியில் திளைத்து, தூய ஆவியாரின் துணையால் பெருகிவந்தது.
பேதுரு எல்லா இடங்களுக்கும் சென்று வந்தார்; ஒரு நாள் லித்தாவில் வாழ்ந்த இறைமக்களிடம் வந்து சேர்ந்தார். அங்கே அவர் எட்டு ஆண்டுகள் முடக்குவாதத்தால் படுக்கையில் கிடந்த ஐனேயா என்னும் பெயருடைய ஒருவரைக் கண்டார்; அவரிடம், “ஐனேயா, இயேசு கிறிஸ்து உம் பிணியைப் போக்குகிறார்; எழுந்து உம் படுக்கையை நீரே சரிப்படுத்தும்” என்று பேதுரு கூறினார். உடனே அவர் எழுந்தார். லித்தாவிலும் சாரோனிலும் வாழ்ந்து வந்தவர்கள் அனைவரும் அதைக் கண்டு ஆண்டவரிடம் திரும்பினார்கள்.
யோப்பா நகரில் தபித்தா என்னும் பெயருடைய பெண் சீடர் ஒருவர் இருந்தார். அவர் தொற்கா என்றும் அழைக்கப்பட்டார்; நன்மை செய்வதிலும் இரக்கச் செயல்கள் புரிவதிலும் அவர் முற்றிலும் ஈடுபட்டிருந்தார். உடல்நலம் குன்றி ஒரு நாள் அவர் இறந்துவிட்டார். அங்கிருந்தோர் அவரது உடலைக் குளிப்பாட்டி மேல்மாடியில் கிடத்தியிருந்தனர். யோப்பாவிற்கு அருகிலுள்ள லித்தாவுக்குப் பேதுரு வந்திருப்பதைச் சீடர்கள் கேள்விப்பட்டு இருவரை அவரிடம் அனுப்பி, “எங்களிடம் உடனே வாருங்கள்” என்று கெஞ்சிக் கேட்டார்கள்.
பேதுரு புறப்பட்டு அவர்களோடு வந்தார். வந்ததும் அவர்கள் அவரை மேல்மாடிக்கு அழைத்துச் சென்றார்கள். கைம்பெண்கள் அவரருகில் வந்து நின்று, தொற்கா தங்களோடு இருந்தபோது செய்துகொடுத்த எல்லா அங்கிகளையும் ஆடைகளையும் காண்பித்தவாறே அழுதார்கள். பேதுரு அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு, முழந்தாள்படியிட்டு இறைவனிடம் வேண்டினார்; அவரது உடலின் பக்கமாகத் திரும்பி, “தபித்தா, எழுந்திடு” என்றார். உடனே அவர் கண்களைத் திறந்து பேதுருவைக் கண்டு, எழுந்து உட்கார்ந்தார். பேதுரு அவருடைய கையைப் பிடித்து எழுந்து நிற்கச் செய்தார். இறைமக்களையும் கைம்பெண்களையும் கூப்பிட்டு, அவர்கள்முன் அவரை உயிருடன் நிறுத்தினார்.
இது யோப்பா நகர் முழுவதும் தெரிய வரவே, ஆண்டவர்மீது பலர் நம்பிக்கை கொண்டனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment