ஏப்ரல் 3 : நற்செய்தி வாசகம்
மரியாவைத் தடுக்காதீர்கள். என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-11
பாஸ்கா விழாவுக்கு ஆறு நாளுக்கு முன்பு இயேசு பெத்தானியாவுக்குச் சென்றார். அங்குதான் இயேசு இலாசரை உயிர்த்தெழச் செய்தார். அங்கு அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது. மார்த்தா உணவு பரிமாறினார். இயேசுவோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்களுடன் இலாசரும் இருந்தார். மரியா இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத் தைலம் ஏறக்குறைய முந்நூற்று இருபது கிராம் கொண்டுவந்து இயேசுவின் காலடிகளில் பூசி, அதனைத் தமது கூந்தலால் துடைத்தார். தைலத்தின் நறுமணம் வீடெங்கும் கமழ்ந்தது.
இயேசுவின் சீடருள் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவனுமான யூதாசு இஸ்காரியோத்து, “இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டான். ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல, மாறாக அவன் ஒரு திருடனாய் இருந்ததால்தான் இப்படிக் கேட்டான். பணப்பை அவனிடம் இருந்தது. அதில் போடப்பட்ட பணத்திலிருந்து அவன் எடுத்துக்கொள்வதுண்டு. அப்போது இயேசு, “மரியாவைத் தடுக்காதீர்கள். என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும். ஏழைகள் உங்களோடு என்றும் இருக்கிறார்கள். ஆனால் நான் உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை” என்றார்.
இயேசு அங்கு இருப்பதை அறிந்த யூதர்கள் பெருந்திரளாய் வந்தார்கள். அவர்கள் இயேசுவை முன்னிட்டு மட்டும் அல்ல, அவர் உயிர்த்தெழச்செய்திருந்த இலாசரைக் காண்பதற்காகவும் வந்தார்கள். ஆதலால் தலைமைக் குருக்கள் இலாசரையும் கொன்றுவிடத் திட்டமிட்டார்கள். ஏனெனில் இலாசரின் காரணமாக யூதர்களிடமிருந்து பலர் விலகி இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment