ஏப்ரல் 30 : முதல் வாசகம்
கடவுள் அவரை ஆண்டவரும் மெசியாவுமாக்கினார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 14a, 36-41
பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்த குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: “நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.”
அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய் பேதுருவையும் மற்றத் திருத்தூதர்களையும் பார்த்து, “சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்குப் பேதுரு, அவர்களிடம், “நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள். ஏனென்றால் இந்த வாக்குறுதியானது உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் தொலையிலுள்ள யாவருக்கும் ஆண்டவராகிய கடவுள் தம்மிடம் அழைக்கும் அனைவருக்கும் உரியது” என்றார்.
மேலும் அவர் வேறுபல சான்றுகளை எடுத்துக்கூறி, “நெறிகெட்ட இந்தத் தலைமுறையிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தினார். அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப் பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment