மே 13 : முதல் வாசகம்
மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 1-10
அந்நாள்களில்
பவுல் தெருபை, லிஸ்திரா ஆகிய நகர்களை வந்தடைந்தார். லிஸ்திராவில் திமொத்தேயு என்னும் பெயருள்ள சீடர் ஒருவர் இருந்தார். அவருடைய தாய் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட ஒரு யூதப் பெண். தந்தையோ கிரேக்கர். திமொத்தேயு லிஸ்திராவிலும், இக்கோனியாவிலும் உள்ள சகோதரர் சகோதரிகளிடையே நற்சான்று பெற்றவர். பவுல் அவரைத் தம்முடன் கூட்டிச் செல்ல விரும்பினார். அவ்விடங்களிலுள்ள யூதரின் பொருட்டு அவருக்கு விருத்தசேதனம் செய்வித்தார். ஏனெனில் அனைவரும் அவருடைய தந்தை கிரேக்கர் என்று அறிந்திருந்தனர்.
அவர்கள் நகர் நகராகச் சென்றபோது எருசலேமிலுள்ள மூப்பரும் திருத்தூதரும் செய்த தீர்மானங்களை அவர்களிடம் கொடுத்துக் கடைப் பிடிக்குமாறு கூறினார். இவ்வாறு திருச்சபைகள் நம்பிக்கையில் உறுதி பெற்று நாளுக்கு நாள் எண்ணிக்கையில் பெருகிவந்தன.
பின்பு ஆசியாவில் இறைவார்த்தையை அறிவிக்காதவாறு தூய ஆவியார் தடுக்கவே, அவர்கள் பிரிகிய, கலாத்தியப் பகுதிகளைக் கடந்து சென்றனர். அவர்கள் மீசியா அருகே வந்து பித்தினியாவுக்குச் செல்ல முயன்றபோது இயேசுவின் ஆவியார் அவர்களை அங்குப் போகவிடவில்லை. எனவே அவர்கள் மீசியா வழியாகச் சென்று துரோவா நகரை அடைந்தனர்.
பவுல் அங்கு இரவில் ஒரு காட்சி கண்டார். அதில் மாசிதோனியர் ஒருவர் வந்து நின்று, “நீர் மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்” என்று வேண்டினார். இக்காட்சியைப் பவுல் கண்டதும், நாங்கள் மாசிதோனியருக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்துள்ளார் என எண்ணி, அங்குச் செல்ல வழி தேடினோம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment