மே 14 : இரண்டாம் வாசகம்
மனித இயல்போடு இருந்த கிறிஸ்து இறந்தார் எனினும் ஆவிக்குரிய இயல்பு உடையவராய் உயிர் பெற்றெழுந்தார்.
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 15-18
அன்பிற்குரியவர்களே,
உங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள். நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள். ஆனால், பணிவோடும் மரியாதையோடும் விடை அளியுங்கள். உங்கள் மனச்சான்றும் குற்றமற்றதாய் இருக்கட்டும். அப்பொழுது உங்கள் கிறிஸ்தவ நன்னடத்தையைப் பழிக்கிறவர்கள் உங்களை இழிவாகப் பேசியதைக் குறித்து வெட்கப்படுவார்கள். ஏனெனில், தீமை செய்து துன்புறுவதைவிட, கடவுளுக்குத் திருவுளமானால், நன்மை செய்து துன்புறுவதே மேல்.
கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார். அவர் உங்களைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கவே இறந்தார். நீதியுள்ளவராகிய அவர் நீதியற்றவர்களுக்காக இறந்தார். மனித இயல்போடு இருந்த அவர் இறந்தார் எனினும் ஆவிக்குரிய இயல்பு உடையவராய் உயிர் பெற்றெழுந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 14: 23
அல்லேலூயா, அல்லேலூயா!
என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
No comments:
Post a Comment