செப்டம்பர் 1 : முதல் வாசகம்
நீங்கள் தூயோர் ஆவதே கடவுளுடைய திருவுளம்.
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-8
சகோதரர் சகோதரிகளே! நீங்கள் கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழும் முறையை எங்களிடம் கற்றுக்கொண்டீர்கள்; அப்படியே வாழ்ந்தும் வருகிறீர்கள். இதில் இன்னும் முன்னேற வேண்டுமென ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் உங்களிடம் இறுதியாகக் கேட்டுக் கொள்கிறோம். ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளையை நீங்கள் அறிவீர்கள்.
நீங்கள் தூயோர் ஆவதே கடவுளுடைய திருவுளம்; பரத்தைமையை நீங்கள் தவிர்க்க வேண்டும். உங்களில் ஒவ்வொருவரும் தம் மனைவியைத் தூயவராகக் கருதி, மதிப்புடன் நடத்த அறிந்திருக்க வேண்டும். கடவுளை அறியாத பிற இனத்தாரைப் போன்று நீங்கள் கட்டுக்கடங்காப் பாலுணர்வுக்கு இடம் கொடுக்கலாகாது. இதில் எவரும் தவறிழைத்துத் தம் சகோதரரை வஞ்சிக்கக் கூடாது. ஏனெனில் இத்தகைய செயல்கள் அனைத்தையும் ஆண்டவரே தண்டிப்பார். இதை நாங்கள் முன்னமே உங்களிடம் எடுத்துரைத்திருக்கிறோம்; எச்சரித்தும் இருக்கிறோம். கடவுள் நம்மை ஒழுக்கக்கேட்டிற்கு அல்ல, தூய வாழ்வுக்கே அழைத்தார். எனவே இக்கட்டளைகளைப் புறக்கணிப்போர், மனிதரை அல்ல, தம்முடைய தூய ஆவியை உங்களுக்கும் அளிக்கும் கடவுளையே புறக்கணிக்கின்றனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment