ஆகஸ்ட் 11 : முதல் வாசகம்
உங்கள் மூதாதையர்க்கு அவர் அன்பு காட்டியதால், அவர்களுடைய வழிமரபினரைத் தேர்ந்துகொண்டார்.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 32-40
மோசே மக்களை நோக்கிக் கூறியது:
உங்களுக்கு முற்பட்ட பண்டைக் காலத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கடவுள், உலகில் மனிதனைப் படைத்த நாள் முதல், வானத்தின் ஒருமுனை முதல் மறுமுனை வரைக்கும் எங்காவது இத்தகைய மாபெரும் செயல் நடந்ததுண்டோ? அல்லது இதுபோல் கேள்விப் பட்டதுண்டா? நெருப்பின் நடுவிலிருந்து பேசிய கடவுளின் குரலொலியைக் கேட்டும், நீங்கள் உயிர்வாழ்ந்தது போல் வேறு எந்த மக்களினமாவது வாழ்ந்ததுண்டா? அல்லது, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் எகிப்தில் உங்கள் கண்முன்னே உங்களுக்குச் செய்த அனைத்தையும் போல சோதனைகள், அடையாளங்கள், அருஞ்செயல்கள், போர், வலிய கரம், ஓங்கிய புயம் மற்றும் அச்சுறுத்தும் நிகழ்ச்சிகள் மூலம் ஓர் இனத்தை வேறொரு நாட்டினின்று தமக்கென உரிமையாக்கிக் கொள்ள முன்வரும் கடவுள் உண்டா?
‘ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்’ என நீங்கள் அறிந்துகொள்ளும்படியாக இவை உங்கள் கண்முன் நிறைவேற்றப்பட்டன. நீங்கள் கற்றுக்கொள்ளும்படி வானினின்று வந்த அவர்தம் குரலை நீங்கள் கேட்குமாறு செய்தார். தமது பெரும் நெருப்பை மண்ணுலகில் நீங்கள் காணச் செய்தார். அந்நெருப்பினின்று வந்த அவரது வாக்கை நீங்கள் கேட்டீர்கள். உங்கள் மூதாதையர்க்கு அவர் அன்பு காட்டியதால், அவர்களுக்குப் பின், அவர்களுடைய வழிமரபினரைத் தேர்ந்துகொண்டார். எனவே அவரே முன்நின்று தமது பேராற்றலுடன் உங்களை எகிப்திலிருந்து கூட்டி வந்தார். உங்களை விட ஆற்றலும் வலிமையும் மிகுந்த வேற்றினத்தாரை உங்கள் முன்னின்று துரத்தவும், உங்களை அவர்களது நாட்டிற்குள் இட்டுச்சென்று இன்றும் உள்ளது போல், அதை உங்களது உரிமைச் சொத்தாகத் தரவுமே கூட்டி வந்தார்.
‘மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்’ என இன்று அறிந்து, உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் அவரது நியமங்களையும் கட்டளைகளையும் பின்பற்றுங்கள். அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும். மேலும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு எக்காலத்திற்கும் கொடுக்கும் மண்ணில் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment