ஆகஸ்ட் 12 : முதல் வாசகம்
உன் முழு இதயத்தோடு உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 6: 4-13
மோசே மக்களை நோக்கிக் கூறியது:
இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!
இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும். நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின்போதும், நீ படுக்கும்போதும், எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு. உன் கையில் அடையாளமாக அவற்றைக் கட்டிக்கொள். உன் கண்களுக்கிடையே அடையாளப் பட்டமாக அவை இருக்கட்டும். உன் வீட்டின் கதவு நிலைகளிலும் நுழைவாயில்களிலும் அவற்றை எழுது.
மேலும், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு எனும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள் உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் புகச் செய்யும்போதும், நீ கட்டி எழுப்பாத, பரந்த வசதியான நகர்களையும், நீ நிரப்பாத எல்லாச் செல்வங்களால் நிறைந்த வீடுகளையும், நீ வெட்டாத பாறைக் கிணறுகளையும், நீ நடாத திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும் அவர் உனக்குக் கொடுக்கும்போதும், நீ உண்டு நிறைவுகொள்ளும்போதும், அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியே கூட்டிவந்த ஆண்டவரை மறந்துவிடாதபடி கவனமாய் இரு.
உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நட! அவருக்குப் பணிந்து அவர் பெயராலே ஆணையிடு!
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment