ஆகஸ்ட் 13 : இரண்டாம் வாசகம்
என் சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகக்கூட விரும்பியிருப்பேன்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 9: 1-5
சகோதரர் சகோதரிகளே,
கிறிஸ்துவைச் சார்ந்த நான் சொல்வது உண்மை, பொய்யல்ல. தூய ஆவியால் தூண்டப்படும் என் மனச்சான்றே நான் சொல்வதற்குச் சாட்சி. உள்ளத்தில் எனக்குப் பெருந்துயரமும் இடைவிடாத வேதனையும் உண்டு.
என் சொந்த இனத்தைச் சேர்ந்த என் சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகக்கூட விரும்பியிருப்பேன். அவர்கள்தாம் இஸ்ரயேல் மக்கள்; அவர்களையே கடவுள் தம் மக்களாக ஏற்றுக்கொண்டார். அவர்கள் நடுவில்தான் கடவுள் தம் மாட்சியை விளங்கச் செய்தார். உடன்படிக்கைகளும் திருச்சட்டமும் திருவழிபாடும் வாக்குறுதிகளும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன. குலமுதல்வர்களின் வழிவந்தவர்கள் அவர்கள்; மனிதர் என்னும் முறையில் கிறிஸ்துவும் அவர்களிடமிருந்தே தோன்றினார். இவரே எல்லாவற்றுக்கும் மேலான கடவுள்; என்றென்றும் போற்றுதற்குரியவர். ஆமென்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திபா 130: 5
அல்லேலூயா, அல்லேலூயா!
ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். அல்லேலூயா.
No comments:
Post a Comment