ஆகஸ்ட் 23 : முதல் வாசகம்
செக்கேமின் மக்களே, எனக்குச் செவிசாயுங்கள்; கடவுள் உங்களுக்குச் செவிகொடுப்பார்.
நீதித்தலைவர்கள் நூலிலிருந்து வாசகம் 9: 6-15
அந்நாள்களில்
செக்கேம் மற்றும் பெத்மில்லோவின் குடிமக்கள் அனைவரும் செக்கேமில் ‘சிலைத் தூண் கருவாலி’ மரத்தடியில் அபிமெலக்கை அரசனாக ஏற்படுத்தினர்.
இது யோத்தாமுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் கெரிசிம் மலைக்கு ஏறிச் சென்று அதன் உச்சியில் நின்றுகொண்டு உரத்த குரலில் கூப்பிட்டுக் கூறியது: “செக்கேமின் மக்களே, எனக்குச் செவிசாயுங்கள்; கடவுள் உங்களுக்குச் செவிகொடுப்பார். மரங்கள், தங்களுக்கு ஓர் அரசனைத் திருப்பொழிவு செய்யப் புறப்பட்டன. அவை ஒலிவ மரத்திடம், ‘எங்களை அரசாளும்’ என்று கூறின. ஒலிவ மரம் அவற்றிடம், ‘எனது எண்ணெயால் தெய்வங்களும் மானிடரும் மதிப்புப் பெறுகின்றனர். அப்படியிருக்க அதை உற்பத்தி செய்வதை நான் விட்டுக்கொடுத்து மரங்களுக்கு மேல் அசைந்தாட வருவேனா?’ என்றது. மரங்கள் அத்தி மரத்திடம், ‘வாரும், எங்களை அரசாளும்’ என்றன. அத்தி மரம் அவற்றிடம், ‘எனது இனிமையையும் நல்ல பழத்தையும் விட்டுவிட்டு, மரங்கள் மீது அசைந்தாட வருவேனா?’ என்றது.
மரங்கள் திராட்சைக் கொடியிடம், ‘வாரும், எங்களை அரசாளும்’ என்றன. திராட்சைக் கொடி அவற்றிடம், ‘தெய்வங்களையும் மானிடரையும் மகிழ்விக்கும் எனது திராட்சை இரசத்தை விட்டுவிட்டு மரங்கள்மேல் அசைந்தாட வருவேனா?’ என்றது. மரங்கள் எல்லாம் முட்புதரிடம், ‘வாரும் எங்களை அரசாளும்’ என்றன. முட்புதர் மரங்களிடம், ‘உண்மையில், உங்கள்மீது ஆட்சி செய்ய நீங்கள் என்னைத் திருப்பொழிவு செய்தால், வாருங்கள்; என் நிழலில் அடைக்கலம் புகுங்கள்; இல்லையேல், முட்புதரான என்னிடமிருந்து நெருப்பு கிளர்ந்தெழுந்து லெபனோனின் கேதுரு மரங்களை அழித்துவிடும்’ என்றது.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment